< Back
மாநில செய்திகள்
விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்றால் அதிக லாபம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்றால் அதிக லாபம்

தினத்தந்தி
|
15 Oct 2023 12:15 AM IST

விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என்று கள்ளக்குறிச்சியில் நடந்த விவசாயிகளுக்கு வர்த்தக தொடர்பு பணிமனை நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் பேசினார்.

கள்ளக்குறிச்சியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகவரித்துறை மற்றும் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் நிலை-3 சார்பில் மணிமுக்தா உபவடி நிலப்பகுதியில் அமைந்துள்ள பல்வேறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தைச் சார்ந்த விவசாயிகளுக்கு வர்த்தக தொடர்பு பணிமனை நிகழ்ச்சி நடந்தது. இதற்கு வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். வேளாண்மை துணை இயக்குனரும், கலெக்டரின் நேர்முக உதவியாளருமான விஜயராகவன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், விதை ஆய்வு துணை இயக்குனர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை உதவி இயக்குனர் அன்பழகன் வரவேற்றார்.

வளர்ச்சி பெற...

நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி பேசியதாவது:-

விவசாயிகள் தங்களது செல்போனில் உழவன் செயலியை பதிவேற்றம் செய்து வேளாண்மை மற்றும் இதர துறைகளின் திட்டங்களை பயன்படுத்தி தங்கள் நிறுவனத்தில் தொழில் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் செயல்படுகிறது. அனைவரும் இணைந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பு ஏற்படுத்தி வளர்ச்சி பெறவேண்டும். மேலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் விவசாயிகளின் பொருட்களை கொள்முதல் செய்து நிறுவனங்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதன் மூலமும், மதிப்புக்கூட்டல் செய்து பொருட்களை விற்பதன் மூலமும் அதிக லாபம் பெற முடியும். வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெற வேண்டும். விதை ஆய்வு துணைஉழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் விதை விற்பனை நிலையம் தொடங்கி விவசாயிகளுக்கு தரமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள்

நிகழ்ச்சியில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பட்டு வளர்ச்சித்துறை மற்றும் மகளிர் திட்டம் மூலம் அரங்குகள் அமைக்கப்பட்டு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் இயற்கை இடுபொருட்கள் வைக்கப்பட்டிருந்து.

இதில் வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) சத்தியமூர்த்தி, தோட்டக்கலை உதவி இயக்குனர் வாமலை, வேளாண்மை அலுவலர்கள் அர்வின்ராஜ், தமிழ்வாணன், ராஜ்குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் மணிகண்டன், சிவா, பரசுராமன், ரமேஷ்குமார், சதீஷ்மன்னன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்