தர்மபுரி
மொரப்பூர் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த சகோதரர்கள் மீது வழக்கு
|மொரப்பூர்:
மொரப்பூர் அருகே உள்ள கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னராஜ். இவருக்கு திருமணமாகி முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் அதே பகுதியை சேர்ந்த யசோதா என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். சின்னராஜ் தனது 2-வது மனைவிக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு சொந்தமான 1 ஏக்கர் 48 சென்ட் நிலத்தை கிரயம் செய்து கொடுத்தார். இந்த நிலையில் சின்னராஜின் முதல் மனைவியின் மகன்களான பழனி (வயது 42), செந்தில் (40) ஆகியோர் சேர்ந்து சின்னராஜ், யசோதாவை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டு நிலத்தை அபகரித்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனை தொட்ந்து சின்னராஜூம், யசோதாவும் வேறு பகுதியில் வாடகை வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் சின்னராஜிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. அப்போது யசோதாவிற்கு பழனி, செந்தில் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து யசோதா மொரப்பூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பழனி, செந்தில் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.