ஈரோடு
தாளவாடி அருகே மொபட்டில் மான் இறைச்சி கடத்திய 2 பேருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
|தாளவாடி அருகே மொபட்டில் மான் இறைச்சி கடத்திய 2 பேருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தாளவாடி
தாளவாடி அருகே மொபட்டில் மான் இறைச்சி கடத்திய 2 பேருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் பேரம் பேசியதாக 2 போலீசார் பணிஇடமாற்றம் செய்யப்பட்டனர்.
மான் இறைச்சி
தாளவாடி அருகே உள்ள எரகனள்ளி கிராமத்தில் தாளவாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோபாலன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு மொபட்டில் 2 பேர் வந்தனர். அவர்கள் 2 சாக்கு மூட்டைகளும் வைத்திருந்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மொபட்டை நிறுத்தி, அவர்கள் வைத்திருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அதில் மான் இறைச்சி இருந்தது. இதனால் போலீசார் மொபட்டில் வந்த 2 பேரையும் பிடித்துவைத்து ஜீர்கள்ளி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
ரூ.50 ஆயிரம் அபராதம்
அதன்பேரில் அங்கு சென்ற வனச்சரகர் ராமலிங்கம் போலீசார் பிடித்து வைத்திருந்த 2 பேரிடமும் விசாரணை நடத்தினார். அதில் அவர்கள் எரகனள்ளி கிராமத்தை சேர்ந்த எஸ்வந்த் (வயது 26) மற்றும் மணிகண்டன் (29) ஆகியோர் என்பது தெரிந்தது.
மேலும் அவர்கள் வனப்பகுதியில் விலங்குகளால் வேட்டையாடப்பட்ட மானின் இறைச்சியை சேகரித்து விற்பதற்காக மொபட்டில் கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து எஸ்வந்த், மணிகண்டன் ஆகியோருக்கு வனச்சரகர் ராமலிங்கம் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார். மான் இறைச்சியும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
2 போலீசார் பணி இடமாற்றம்
இதற்கிடையே மான் இறைச்சி கடத்தி வந்த எஸ்வந்த், மணிகண்டன் ஆகியோரிடம் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோபாலன் ஆகியோர் பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜ்மல் ஜமால் விசாரணை நடத்தினார். விசாரணையில் போலீசார் 2 பேரும் மான்இறைச்சி கடத்தி வந்தவர்களிடம் பேரம் பேசியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோபாலன் ஆகியோரை தாளவாடி போலீஸ் நிலையத்தில் இருந்து சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு பணிஇடமாற்றம் செய்து துணை போலீஸ் சூப்பிரண்டு் அஜ்மல் ஜமால் உத்தரவிட்டார்.