திருச்சி
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மூலவர் திருவடியை இன்று முதல் தரிசிக்கலாம்
|ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மூலவர் திருவடியை இன்று முதல் தரிசிக்கலாம்.
ஸ்ரீரங்கம்:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மூலவர் ரெங்கநாதர் திருமேனி சுதையினால் செய்யப்பட்டதாகும். மூலவர் ரெங்கநாதருக்கு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் எதுவும் செய்யப்படுவதில்லை. மேலும் சுதை திருமேனியை ஆண்டுக்கு இருமுறை பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் தனித்தைலத்தை பூசி பாதுகாத்து வருகின்றனர். இந்த தைலம் சந்தனம், சாம்பிராணி, அகில், வெட்டிவேர் உள்பட வாசனை திரவியங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பெருமாள் திருமேனியில் தைலம் பூசும் முறைக்கு தைலக்காப்பு என்று பெயர்.
தைலக்காப்பின்போது பெருமாளின் அனைத்து வஸ்திரங்களும், திருவாபரணங்களும் களையப்பட்டு திருமேனி முழுவதும் தைலம் பூசப்படும். தைலக்காப்பு உலர்வதற்கு 48 நாட்கள் ஆகும். அதுவரை பெருமாளின் திருமுகம் தவிர்த்து திருமேனியின் இதர பகுதிகள் மெல்லிய துணிகளால் தற்காலிக திரையிட்டு மறைக்கப்படும். தைலக்காப்பு உலர்ந்த பின்னர் பெருமாளுக்கு வஸ்திரங்கள், நகைகள் அணிவிக்கப்பட்டு திரை அகற்றப்படும்.
இந்த ஆண்டுக்கான முதல் தைலக்காப்பு கடந்த ஜூலை மாதம் 11-ந் தேதி மூலவர் பெரிய பெருமாள் மீது பூசப்பட்டது. இதனை தொடர்ந்து பெருமாளின் திருமுகம் தவிர்த்து திருமேனியின் இதர பகுதிகள் மெல்லிய துணிகளால் தற்காலிக திரையிட்டு மறைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தைலக்காப்பு உலர்ந்துவிட்டதை அர்ச்சகர்கள் உறுதி செய்து கோவில் நிர்வாகத்திற்கு முறைப்படி தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இன்று(வெள்ளிக்கிழமை) மதியம் பூஜைகளுக்குப்பின் பெருமாள் திருமேனி மீது வஸ்திரங்கள், திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படும். பின்னர் திருமேனியை மறைத்துக் கட்டப்பட்டுள்ள திரை அகற்றப்படும். இதையடுத்து மதியம் 3 மணி முதல் மூலவர் ரெங்கநாதரை முழு அலங்காரத்துடன் அவரது திருவடியையும் பக்தர்கள் தரிசிக்கலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.