"பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக துரிதமாக இருக்கும்" - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
|தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக துரிதமாக இருக்கும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் கடந்த ஆண்டு பருவமழையின் போது, மாநகராட்சியின் பல்வேறு குடியிருப்பு பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த ஆண்டு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பருவமழை பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக துரிதமாக இருக்கும் என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கடந்த முறை மழை பாதிப்பு ஏற்பட்ட இடங்களை கவனமாக வைத்து, மீண்டும் அந்த இடங்களில் பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அதே போல் தமிழகத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் உள்பட எல்லா அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என முதல்-அமைச்சர் அறிவுறுத்தியதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.