திருநெல்வேலி
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வு கூட்டம்
|நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் பேரிடர் மேலாண்மை இயக்குனர் ராமன் தலைமையில் நடந்தது.
நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மை மற்றும் தமிழ்நாடு பேரிடர் தணிக்கும் முகமை இயக்குனர் ராமன் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், பேரிடர் மேலாண்மை மற்றும் தமிழ்நாடு பேரிடர் தணிக்கும் முகமை இயக்குனர் ராமன் பேசும் போது, வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையை சார்ந்த கண்காணிப்பு அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தாலுகாக்களில் பேரிடர்களால் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளை ஆய்வு செய்து பொதுமக்களை தங்க வைக்க இடங்கள் தயார் நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். கால்வாய்களில் மழைநீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேரிடர் காலங்களில் எவ்வித உயிர் இழப்பும் ஏற்படாதவாறு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பருவகாலங்களில் பயன்படுத்தப்படும் மீட்பு கருவிகள் அனைத்தும் செயல்படும் நிலையில் உள்ளதா என்பதை பரிசோதனை செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
சேதமடைந்த கட்டிடங்கள், கைவிடப்பட்ட கிணறு மற்றும் குவாரிகளில் விபத்து ஏற்படாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆப்தமித்ரா தன்னார்வலர்களின் விவரங்களை சேகரித்து பேரிடர் காலங்களில் மீட்புபணியில் உரிய முறையில் பயன்படுத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள பேரிடர் கால செயல்பாட்டு மையத்தை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) மகேஸ்வரன், பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வம் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.