திருவள்ளூர்
திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களை அச்சுறுத்தி குரங்குகள் அட்டகாசம்
|திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களை குரங்குகள் அச்சுறுத்தி அட்டகாசம் செய்து வருகின்றன. அவற்றை கூண்டுகள் வைத்து பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகனின் 6 படை வீடுகளில் ஒன்றான 5-ம் படை வீடாக கருதப்படும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். மேலும் முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களான ஆடிக்கிருத்திகை, தைப்பூசம், மற்றும் கிருத்திகை நாட்களில் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், தற்போது இக்கோவிலுக்குள் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களை குரங்குகள் அச்சுறுத்தி வருகிறது. கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்தை பக்தர்கள் சாப்பிடும்போது அதை குரங்குகள் பறித்து செல்கின்றன.
மேலும் பக்தர்கள் கையில் கொண்டு வரும் தேங்காய், பழங்களை கண்டதும் குரங்கள் திடீரென பாய்ந்து வந்து பறித்து செல்வதோடு மட்டுமல்லாமல் காயப்படுத்தி விட்டு செல்கிறது. சமீப நாட்களாக கோவிலில் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு மலைக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பெங்களூருவைச் சேர்ந்த நளினி, அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் ஆகியோர் குரங்குகள் தாக்க முயன்றதில் அதிர்ச்சியில் மரணமடைந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த பிரியா (வயது 29) என்பவரை மலைக்கோவில் தேர்வீதி பகுதியில் குரங்குகள் தாக்கி பழங்களை பறித்து சென்றது. குரங்குகள் தாக்கியதில் முதுகில் படுகாயமடைந்த பிரியாவுக்கு ஆஸ்பத்திரியில் பல இடங்களில் தையல் போடப்பட்டது.
இதனையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடிக்க வனத்துறையினரிடம் அனுமதி கோரியது. இதையடுத்து திருத்தணி வனசரகர் அருள்நாதன் தலைமையில் வன ஊழியர்கள் நேற்று மலைக்கோவிலில் கூண்டுகளை வைத்து 50-க்கும் மேற்பட்ட குரங்குகளை பிடித்தனர். பிடிபட்ட குரங்குகளை ஆந்திர மாநில வனப்பகுதியில் விட்டனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், 'குரங்குகள் அனைத்தும் கோவிலை சுற்றியுள்ள பச்சரிசி மலை, பிண்ணாக்கு மலையில் தான் சுற்றித் திரிகின்றன.
அவைகளுக்கு குடிக்க தண்ணீர் மற்றும் உணவுகள் இல்லாததால் கோவிலை நோக்கி படையெடுக்கின்றன. கோவிலுக்கு வரும் பக்தர்களில் சிலர் உணவு வழங்குவதால் கோவிலை விட்டு குரங்குகள் செல்ல மறுக்கின்றன என தெரிவித்தார்.