புதுக்கோட்டை
புதுக்கோட்டை வாலிபருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி
|சிங்கப்பூரில் இருந்து வந்த புதுக்கோட்டை வாலிபருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
குரங்கு அம்மை அறிகுறி
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தை சேர்ந்த 35 வயது வாலிபர் ஒருவர் சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஸ்கூட் விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். அவருக்கு விமானநிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது குரங்கு அம்மை தொற்று நோய்க்கான அறிகுறி இருந்துள்ளது. இதையடுத்து, அந்த பயணியை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு விமான நிலைய மருத்துவ குழுவினர் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நோய் பாதிப்பு ஒன்றும் இல்லை, அதனால் பயப்பட வேண்டாம் என டாக்டர் ஒருவர் அவருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். இதனால் அவர் மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆகாமல் சொந்த ஊருக்கு சென்றார்.
ரத்த மாதிரி
இதற்கிடையே மருத்துவமனையில் அந்த வாலிபர் இல்லாததால் புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த நபரின் முகவரியை வைத்து அதிகாரிகள் நேற்று அவரது வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரிடம் பேசி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் அவரது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்தபின்தான் அவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று பாதிப்பு உள்ளதா? என்பது தெரியவரும் என அதிகாரிகள் கூறினர்.