கள்ளக்குறிச்சி
கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பபதிவு முகாமை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
|கள்ளக்குறிச்சி அருகே மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பபதிவு முகாமை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் நிறைமதி கிராமத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பபதிவு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கலெக்டர் ஷ்ரவன்குமார் முன்னிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பு அதிகாாியும், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளருமான பிரதீப் யாதவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம், முகாமில் மகளிர் அமர்வதற்கு போதுமான அளவு இருக்கை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். மேலும் விண்ணப்பங்களை விரைந்து பதிவு செய்ய கூடுதல் தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதனை தொடர்ந்து இந்திலி கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தின்கீழ் எண்ணெய்பனை சாகுபடி திட்டத்தில் 100 சதவீத மானியத்தில் எண்ணெய்பனை செடிகள் நடவு பணியை கண்காணிப்பு அதிகாாி பிரதீப் யாதவ் தொடங்கி வைத்தார்.
உளுந்தூர்பேட்டை
பின்னர் அவர் உளுந்தூர்பேட்டை அருகே சேந்தமங்கலத்தில் நடைபெற்று வந்த குளம் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணியை நல்ல தரத்துடன் மேற்கொள்ள வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பின்னர் ஒலையனூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் சமையல் கூடம் கட்டும் பணி, குமாரமங்கலத்தில் அங்கன்வாடி மையம் கட்டும் பணி உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்கைள் வளர்ச்சிபணிகள் திட்ட அலுவலர் செல்வி, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சசிகலா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.