விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில்வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
|விழுப்புரம் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அதிகாரி ஹர்சகாய் மீனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையின் முதன்மை செயலாளருமான ஹர்சகாய் மீனா நேற்று பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆலப்பாக்கத்தில் தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை சார்பில் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் டிராகன் பழ சப்பாத்திக்கள்ளி செடி வளர்க்கப்பட்டு வருவதை பார்வையிட்டார்.
பின்னர் செட்டிக்குப்பத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் ரூ.53.75 லட்சம் மதிப்பில் 636 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதையும், முதலியார்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.5.17 லட்சத்தில் மாணவிகளின் வசதிக்காக புதியதாக கட்டப்பட்டு வரும் கழிவறை பணியையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
குடியிருப்புகள்
அதனை தொடர்ந்து கீழ்புத்துப்பட்டில் முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்காக ரூ.23.4 கோடியில் கட்டப்பட்டு வரும் 440 குடியிருப்புகளின் கட்டுமான பணியை பார்வையிட்ட அவர், இந்த குடியிருப்புகள் நீண்ட காலம் இருந்திடும் வகையிலும், கடல் உப்புக்காற்றினால் பாதிப்பு ஏற்படாத வகையிலும் கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
அதன் பின்னர் கொழுவாரி ஊராட்சியில் அமைந்துள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் ரூ.12 லட்சத்தில் கட்டப்படும் புதிய நூலக கட்டிடம், ரூ.10.19 லட்சத்தில் கட்டப்படும் அங்கன்வாடி மைய பணிகளையும் பார்வையிட்ட கண்காணிப்பு அதிகாரி ஹர்சகாய் மீனா, அப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தினார்.
வேளாண் இடுபொருட்கள்
மேலும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் இயற்கை உரங்களை பயன்படுத்தி வீட்டு காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளதையும், கழுப்பெரும்பாக்கத்தில் வேளாண்மை, உழவர் நலத்துறை சார்பில் பயிரிடப்பட்டுள்ள தூயமல்லி நெல் ரகத்தையும் பார்வையிட்டார். தொடர்ந்து, ஒழுந்தியாம்பட்டு ஊராட்சியில் 20 விவசாயிகளுக்கு ரூ.1.37 லட்சம் மதிப்பில் வேளாண் இடுபொருட்களை வழங்கினார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா, ஒன்றியக்குழு தலைவர்கள் மரக்காணம் தயாளன், வானூர் உஷாமுரளி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் பெரியசாமி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அன்பழகன் உள்பட பலர் உடனிருந்தனர்.