< Back
மாநில செய்திகள்
மகளிர் உரிமை திட்ட விண்ணப்பப்பதிவு முகாம்களை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
நாமக்கல்
மாநில செய்திகள்

மகளிர் உரிமை திட்ட விண்ணப்பப்பதிவு முகாம்களை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

தினத்தந்தி
|
21 July 2023 12:15 AM IST

திருச்செங்கோட்டில் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பப்பதிவு முகாம்களை கண்காணிப்பு அலுவலர் குமரகுருபரன் ஆய்வு செய்தார்.

திருச்செங்கோடு

மகளிர் உரிமை திட்டம்

திருச்செங்கோட்டில் பல்வேறு பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பப்பதிவு முகாம் முன்னேற்பாடு பணிகளை தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான குமரகுருபரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து திருச்செங்கோடு தாசில்தார் அலுவலகத்தில் பயோ மெட்ரிக் கருவிகள் வைப்பு அறையை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது முகாமிற்கு தேவையான கருவிகள் உள்ளனவா என்பது குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தெளிவாக எடுத்துரைத்து நிவர்த்தி செய்ய வேண்டும் என கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

மேலும் சட்டையம்புதூரில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பப்பதிவு மாதிரி முகாம் நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பொதுமக்களின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் போது அந்த ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களை முறையாக பதிவு செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

பின்னர் திருச்செங்கோடு நகராட்சியில் சூரியம்பாளையம் ரேஷன் கடை, ராஜா கவுண்டம்பாளையம் நகராட்சி தொடக்கப்பள்ளி, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் ஆண்டிப்பாளையம், அணிமூர் கிராம ஊராட்சி சேவை மையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பப்பதிவு முகாம் அமைக்கப்பட்டுள்ளதை கண்காணிப்பு அலுவலர் குமரகுருபரன் ஆய்வு செய்தார்.

மேலும் திருச்செங்கோடு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் இரண்டு இ-சேவை மையங்களை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, மையத்தில் வழங்கப்படும் சான்றிதழ்கள் குறித்து பணியாளர்களிடம் கண்காணிப்பு அலுவலர் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வுகளின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமரன், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் பிரியா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுகந்தி, இ-சேவை மாவட்ட மேலாளர் சுந்தரராஜ், திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா, தாசில்தார் பச்சமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாதவன், கஜேந்திரபூபதி, அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்