கரூர்
கரூர் மாவட்டத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
|கரூர் மாவட்டத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு அதிகாரி ராஜேஷ் ஆய்வு செய்தார். அப்போது மாணவ-மாணவிகளு டன் அமர்ந்து உணவு அருந்தினார்.
ஆய்வு கூட்டம்
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அனைத்து துறை அலுவலர்களுக்கான ஒருங்கிைணந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். தமிழக அரசின் கைத்தறித்துறை இயக்குனரும், கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ராஜேஷ் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் திட்டமிடல் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
உணவு அருந்தினார்
முன்னதாக எழுதியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் பணியினை பார்வையிட்டு கண்காணிப்பு அலுவலர் ராஜேஷ் குழந்தைகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார். மேலும் செக்கணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவு அளிக்கப்பட்டு சாப்பிடுவதை பார்வையிட்டார்கள்.
அதனைத் தொடர்ந்து மணத்தட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் குழந்தைகளின் வாசிப்பு திறன் குறித்தும், கடம்பர் கோவில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி உயரம் மற்றும் எடை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
பணிகள் ஆய்வு
அதனைத் தொடர்ந்து மணவாசி சமத்துவபுரத்தில் சமுதாயக்கூடம், அங்கன்வாடி மையம், வீடுகள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதையும், வெள்ளியணையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலை பணிகளையும் ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர் கூட்டம், கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.