< Back
மாநில செய்திகள்
குற்றங்களை தடுக்க போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுமா?
தர்மபுரி
மாநில செய்திகள்

குற்றங்களை தடுக்க போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுமா?

தினத்தந்தி
|
29 Jan 2023 12:15 AM IST

தர்மபுரி மாவட்டத்தில் இந்த மாதம் இதுவரை 5 கொலைகள், 12 திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்த நிலையில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீஸ் கண்காணிப்பு பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

குற்ற சம்பவங்கள்

தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, அரூர், பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய 4 உப கோட்டங்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் 29 போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இது தவிர மதுவிலக்கு அமல்பிரிவு, மாவட்ட குற்றப்பிரிவு, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, சைபர் கிரைம் போலீஸ் பிரிவு உள்ளிட்ட பல்வேறு போலீஸ் பிரிவுகள் செயல்படுகின்றன.

தர்மபுரி மாவட்டத்தில் 1,400 போலீசார் பணிபுரிகிறார்கள். தங்கள் போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் 2023-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தர்மபுரி மாவட்டத்தில் ஆங்காங்கே குற்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.

5 கொலைகள்

ஜனவரி 1-ந்தேதி அரூர் அருகே பொய்யனூர் காப்புக்காட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த பார்வதி (வயது 32) கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக சக்திவேல் (42) என்பவர் கோட்டப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். 3-ந்தேதி பஞ்சப்பள்ளியைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்ற பெண் காது அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடி உயிரிழந்தார். விசாரணையில் மாதன் என்ற முதியவர் இவரை தகராறில் கழுத்தை அறுத்து இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் மாதனை கைது செய்தனர்.

இதே நாளில் கிருஷ்ணாபுரம் அருகே விவசாய நிலத்தில் வரப்பு தகராறில் மூதாட்டி பழனியம்மாள், அவருடைய மகன் ராஜமாணிக்கம் ஆகியோர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இதில் தொடர்புடைய பெரியசாமி என்ற விவசாயி போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஜனவரி 19-ந்தேதி கோட்டப்பட்டி அருகே மனோகரன் என்ற விவசாயி கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். முன்விரோதம் காரணமாக இந்த கொலையை செய்த அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (32) போலீசாரால் கைது செய்யப்பட்டார். 21-ந்தேதி பாப்பாரப்பட்டி அருகே நிலத்தகராறில் கல்லால் தாக்கப்பட்டு காயமடைந்த சிவக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் முனியப்பன் என்பவரை கைது செய்தனர். கடந்த சில வாரங்களில் நடந்துள்ள இந்த 5 பேர் கொலை சம்பவங்கள் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்திருந்தாலும் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

12 திருட்டுகள்

இதேபோல் தர்மபுரியில் கடந்த 5-ந்தேதி குடும்பத்துடன் சினிமா பார்க்க சென்ற சாதிக் பாஷா என்பவரின் வீட்டில் 9 பவுன் நகை திருட்டு, 6-ந்தேதி ஆர். கோபிநாதம்பட்டியில் நந்தினி என்பவரின் வீட்டில் 4 பவுன் நகை திருட்டு, தொப்பூர் அருகே கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற ஜோதி என்ற மூதாட்டியிடம் 8 பவுன் நகை திருட்டு, 10-ந்தேதி நல்லம்பள்ளியில் முருகன் என்பவரின் ஜவுளிக்கடையில் ரூ.10 ஆயிரம் மற்றும் துணிகள் திருட்டு, 19-ந்தேதி எச்.புதுப்பட்டியில் புதிய மின் பாதை அமைக்க வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான மின் கம்பிகள் திருட்டு, கடத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் தளவாடப் பொருட்கள் திருட்டு ஆகிய சம்பவங்கள் நடந்துள்ளன.

இதேபோல் கடந்த 23-ந்தேதி பொம்மிடி அருகே 2 கடைகளில் திருட்டு முயற்சி, 26-ந்தேதி நல்லம்பள்ளியில் முத்துலட்சுமி என்பவரின் வீட்டில் நகை மற்றும் ரூ.12 ஆயிரம் திருட்டு, இதன் தொடர்ச்சியாக ஒட்டப்பட்டியில் ஜெயந்தி என்பவர் வீட்டில் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் திருட்டு, நல்லம்பள்ளி அருகே செல்போன் கோபுரத்தில் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள கருவிகள் திருட்டு, பாப்பாரப்பட்டி அருகே ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அருகே 4 கடைகளில் திருட்டு என 12 திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இவற்றில் மின் தளவாடங்கள் திருட்டு உள்ளிட்ட முக்கிய திருட்டுகளில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் மாவட்டத்தில் தொடர் திருட்டுகளை தடுக்க தேவையான கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கூடுதல் போலீசார் தேவை

இது தொடர்பாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து கொலை, திருட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துள்ளன. குறிப்பாக இரவு நேரங்களில் வீடுகள், கடைகளில் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்து மர்ம நபர்கள் திருட்டுகளில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது. இதை தடுக்க போலீசாரின் இரவு நேர ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் பெரும்பாலான போலீஸ் நிலையங்களில் போலீசார் பற்றாக்குறை உள்ளது. இதனால் போலீசாருக்கு கூடுதல் பணி சுமை ஏற்பட்டு வருகிறது.

எனவே ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கும் நிர்ணயிக்கப்பட்ட அளவில் போலீசார் இருக்கும் வகையில் கூடுதல் போலீசாரை நியமிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் சில போலீஸ் நிலையங்களுக்கு தனியாக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். அத்தகைய போலீஸ் நிலையங்களுக்கு தனியாக போலீஸ் இன்ஸ்பெக்டர்களை நியமிக்க வேண்டும். அதன்மூலம் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியை மேலும் தீவிர படுத்த வாய்ப்பு ஏற்படும். குற்ற செயல்கள் நடந்த பின் நடவடிக்கை எடுப்பதை விட குற்றச் செயல்கள் நடக்காமல் முன்கூட்டியே தடுக்க முனைப்புடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்