பண பிரச்சினை... அண்ணனிடம் பேசக்கூடாது என கண்டித்த கணவர்... பெண் எடுத்த விபரீத முடிவு
|பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.
ஈரோடு,
புதுக்கோட்டை மாவட்டம் மட்டக்கல் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 44). இவருடைய மனைவி சரிதா (37). இவர்கள் ஈரோடு அருகே ஆர்.என்.புதூரில் தங்கியிருந்து சித்தோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சரிதாவின் அண்ணன் சிவனேசனுக்கும், சதாசிவத்துக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இதனால் சிவனேசனிடம் பேசக்கூடாது என்று சரிதாவிடம் சதாசிவம் கூறியதாக தெரிகிறது. அதன்பிறகு சரிதா தனது அண்ணனிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார்.
நீண்ட நாட்களாக பேசாமல் மனவேதனையில் இருந்த சரிதா சிவனேசனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த விவரத்தை கூறிஉள்ளார். இதனால் 15 நாட்களுக்கு முன்பு தனது உறவினர்களுடன் சிவனேசன் வந்து சதாசிவம் வீட்டில் பேச்சுவார்த்தை நடத்தினார். நேற்று முன்தினம் சரிதா தனது அண்ணன் சிவனேசனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு மீண்டும் குடும்பத்தகராறு ஏற்பட்டதாக கூறியதாக தெரிகிறது.
இந்தநிலையில் சரிதா நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதன்பிறகு சரிதாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சரிதாவின் அண்ணன் சிவனேசன், தனது தங்கையின் சாவில் சந்தேகம் இருப்பதாக சித்தோடு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.