பண மோசடி வழக்கு: ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குனர் கலைச்செல்வி மற்றும் அவரது கணவர் கைது
|ஹிஜாவு மோசடி தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 13,000 புகார்கள் வந்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
பொதுமக்களிடம் இருந்து முதலீடுகளைப் பெற்று 15 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி, சுமார் ரூ.4,400 கோடி பெற்று மோசடி செய்ததாக ஹிஜாவு நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள், மேலாளர்கள் உள்ளிட்ட 13 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த பண மோசடி வழக்கில் தொடர்புடைய ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குனர் கலைச்செல்வி மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு ஹிஜாவு நிறுவனத்தில் சேர்ந்த ரவிச்சந்திரன், பெருமளவில் முதலீடுகளை திரட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து தனியார் துணை நிறுவனம் ஒன்றை தொடங்கிய ரவிச்சந்திரன், ரூ.300 கோடி வரை ஹிஜாவு நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார்.
மேலும் இதற்கு கமிஷமாக மாதம் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வரை ரவிச்சந்திரன் பெற்றதாகவும், பழனி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் 7 கோடியில் நிலங்கள், சொகுசு கார்களை வாங்கியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 13,000 புகார்கள் வந்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ளவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.