< Back
மாநில செய்திகள்
வேலைவாய்ப்பு தருவதாக கூறி ஆன்லைன் மூலம் பண மோசடிசைபர் குற்றப்பிரிவு போலீசார் எச்சரிக்கை
ஈரோடு
மாநில செய்திகள்

வேலைவாய்ப்பு தருவதாக கூறி ஆன்லைன் மூலம் பண மோசடிசைபர் குற்றப்பிரிவு போலீசார் எச்சரிக்கை

தினத்தந்தி
|
7 Sep 2023 10:10 PM GMT

ஆன்லைன் மூலம் பகுதிநேர வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி நடைபெறும் பண மோசடியில் பொதுமக்கள் யாரும் சிக்கிவிட வேண்டாம் என்று சைபர் குற்றப்பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

ஆன்லைன் மூலம் பகுதிநேர வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி நடைபெறும் பண மோசடியில் பொதுமக்கள் யாரும் சிக்கிவிட வேண்டாம் என்று சைபர் குற்றப்பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

வேலைவாய்ப்பு மோசடி

ஆன்லைன் மோசடிகள் நாள்தோறும் பரந்து விரிந்து கொண்டே வருகின்றன. இணையதளம் மூலம் நடைபெறும் மோசடிகள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. தற்போது பகுதி நேர வேலைவாய்ப்பு என்ற பெயரில் வேலை தேடும் இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் வேலையில் இருப்பவர்கள் என்று ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

வலை விரிக்கும் வலைத்தளங்கள்

இதுகுறித்து ஈரோடு மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் சமீப காலமாக பகுதி நேர வேலைவாய்ப்பு என்ற பெயரில் ஆன்லைனில் மோசடி நிறுவனங்கள் தங்கள் வலையை விரித்து உள்ளன. சமூக வலைத்தளங்கள், கூகுள் உள்ளிட்டவற்றில் பலரும் வேலை வாய்ப்புகள் தேடுகிறார்கள். மோசடி நிறுவனங்கள் சில இணைய தள முகவரிகளை அனுப்புகின்றன. கவர்ச்சிகரமான விளம்பரங்களை பார்த்து வேலை தேடுவோர் விண்ணப்பிக்கிறார்கள். அதில் உள்ள தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவற்றை வைத்து சம்பந்தப்பட்டவர்களை மர்மநபர்கள் மோசடி நிறுவனங்களின் பெயரில் தொடர்பு கொள்கிறார்கள்.

'டாஸ்க் கம்ப்ளீட்'

மிக நேர்த்தியாக பேசி, விண்ணப்பதாரர்களின் விவரங்களை சேகரித்துக்கொள்கிறார்கள். பின்னர் அவர்களுக்கு வழங்கும் பணியின் பெயர் "பார்ட் டைப் ஜாப் டாஸ்க் கம்ப்ளீட்". அதாவது ஒரு இலக்கு கொடுத்து அதை முடித்ததும் உரிய தொகை வழங்குவது. இதற்கு சம்மதம் தெரிவிப்பவர்களுக்கு எளிதான ஒரு இலக்கு வழங்கப்படும்.

அதாவது யூடியூப் சேனலில் ஒரு வீடியோ பார்ப்பது. இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்ப்பது என்று கூகுள், டுவிட்டர் என்று சமூக ஊடகங்கள், இணையதளங்கள் மூலம் செயல்படும் எளிய இலக்கு வழங்கப்படும். அவர்கள் அதை முடித்ததும் அவர்களுக்காக உருவாக்கப்பட்டு உள்ள மின்னணு பணப்பை (வாலட்)-டில் ரூ.100 அல்லது ரூ.150 வழங்கப்படும். இவ்வாறு ஒவ்வொரு இலக்காக முடித்ததும் பணம் வரும்.

ஆசையை தூண்டி மோசடி

அடுத்து முன்பணம் செலுத்தும் (பிரீபெய்டு) திட்டம் வரும். ரூ.1000 செலுத்தி இலக்கை முடித்தால் அவர்களின் வாலட்டில் ரூ.1,400 கிடைக்கும். இப்படி பல லட்சம் ரூபாய் வரை செலுத்தும் வாய்ப்பு உண்டு. ஒரு கட்டத்தில் 'வாலட்'டில் பல லட்சம் ரூபாய் இருப்பதாக காட்டும். ஆனால் அதை எடுக்க முடியாது. அந்த நேரத்தில் ஆசையை தூண்டி மோசடியாக பேசி பேசியே பணத்தை கறந்து விடுவார்கள். ஒரு கட்டத்தில் தாங்கள் மோசடி செய்யப்பட்டதை இவர்கள் உணரும் போது முழுமையாக ஏமாற்றப்பட்டு இருப்பார்கள்.

இதுபோன்ற மோசடிகள் கிராமப்புறங்கள், மாணவ-மாணவிகளை குறிவைத்து நடக்கிறது. எனவே இணையதளங்களில் யாரும் பகுதிநேர வேலை மோசடியில் சிக்கி விட வேண்டாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்