< Back
மாநில செய்திகள்
அதிக லாபம் தருவதாக கூறி ரூ.10 கோடி மோசடி
சிவகங்கை
மாநில செய்திகள்

அதிக லாபம் தருவதாக கூறி ரூ.10 கோடி மோசடி

தினத்தந்தி
|
17 Aug 2022 4:41 PM GMT

அதிக லாபம் தருவதாக கூறி ரூ.10 கோடி வரை மோசடி செய்தவரிடம் இருந்து பணத்தை மீட்டு தரக்கோரி கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அதிக லாபம் தருவதாக கூறி ரூ.10 கோடி வரை மோசடி செய்தவரிடம் இருந்து பணத்தை மீட்டு தரக்கோரி கலெக்டரிடம் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

கூடுதல் லாபம்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த சாகுல் அமீது (வயது 33) மற்றும் இளையான்குடி பகுதியை சேர்ந்த சிலர் சார்பில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-

நான் இளையான்குடியில் மருந்து விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறேன். கடந்த 2018-ம் ஆண்டு மதுரை உத்தங்குடியை சேர்ந்த தினேஷ்குமார் என் கடைக்கு அருகில் மற்றொரு கடையை வாடகைக்கு பிடித்து அலுவலகம் வைத்திருந்தார். அவர் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்வதாகவும், அதில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்றும் கூறினார். இதை நம்பிய நான் கடந்த 2018 முதல் 2021-ம் ஆண்டு வரை பல தவணைகளில் ரூ.80 லட்சம் வரை கொடுத்தேன். நான் கொடுத்த தொகையில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மட்டும் திரும்பி கொடுத்துள்ளார். அதன் பின்பு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

மீட்டுத்தர வேண்டும்

அவர் என்னைப்போல எங்கள் பகுதியை சேர்ந்த சுமார் 600 பேரிடம் இது போல் ஆசைவார்த்தை கூறி சுமார் ரூ.10 கோடி வரை வசூலித்துள்ளார். இது தொடர்பாக நான் உள்பட 113 பேர் கொடுத்த புகாரின் பேரில் தினேஷ்குமார் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தினேஷ்குமார் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் இதுவரை மேல் நடவடிக்கை ஏதும் இல்லை. அத்துடன் எங்கள் பணத்தை பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுத்து இழந்த எங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்