தஞ்சாவூர்
பெண் என்ஜினீயரிடம் ரூ.7 லட்சம் மோசடி
|ஆன்லைனில் பகுதிநேர வேலை எனகூறி பெண் என்ஜினீயரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்;
ஆன்லைனில் பகுதிநேர வேலை எனகூறி பெண் என்ஜினீயரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைனில் பகுதி நேர வேலை
தஞ்சை அருகே உள்ள நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் 30 வயதான பெண் என்ஜினீயர். .சம்பவத்தன்று இவர் தனது சமூக வலைத்தளத்தை(டெலிகிராம்) பயன்படுத்தி வந்தார். அப்போது அவருடைய டெலிகிராமுக்கு ஆன்லைன் பகுதி நேர வேலை என்று இணைய இணைப்புடன் கூடிய குறுஞ்செய்தி வந்தது.அதில் முதலில் குறிப்பிட்ட தொகை செலுத்தினால் உரிய லாபம் என்று டாஸ்க் நிர்ணயம் செய்யப்படும். அந்த டாஸ்க்கை முடித்தவுடன், உங்களுக்கான லாபத்தை பெறலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
ரூ.7 லட்சம் அனுப்பியுள்ளார்
இதனையடுத்து அந்த பெண் முதலில் ரூ.10 ஆயிரத்தை அனுப்பிய நிலையில் அவருக்கு ரூ.13 ஆயிரத்து 870 கிடைத்தது. இதனையடுத்து அவருக்கு அடுத்த டாஸ்க் கொடுக்கப்பட்டது.இதனால் அந்த பெண் மீண்டும் ரூ.10 ஆயிரத்தை செலுத்தினார். அதில் அந்த பெண்ணுக்கு மீண்டும் ரூ.13 ஆயிரத்து 300 கிடைத்தது. தொடர்ந்து அந்த பெண் பல்வேறு தவணைகளில் ரூ.7 லட்சத்து 6 ஆயிரத்து 64 அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அவருக்கு உரிய லாபத்தொகை கிடைக்கவில்லை.
சைபர் கிரைம் போலீசில் புகார்
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் என்ஜினீயர் இதுகுறித்து தனது டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது மறுமுனையில் பேசியவர், நீங்கள் முழு டாஸ்க்கையும் முடித்தால்தான் உங்களுக்கான லாபம் கிடைக்கும் என்று கூறியதோடு மேலும் பணம் கட்டுமாறு கூறியுள்ளார். அப்போதுதான் அந்த பெண் என்ஜினீயர் தனக்கு மோசடி நடந்ததை உணர்ந்தார்.இதனையடுத்து அந்த பெண் என்ஜினீயர், தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொ) செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.