விழுப்புரம்
விழுப்புரம் அருகேபேன்சி ஸ்டோரில் நூதன முறையில் பணம் அபேஸ்3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
|விழுப்புரம் அருகே பேன்சி ஸ்டோரில் நூதன முறையில் பணத்தை அபேஸ் செய்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பேன்சி ஸ்டோர்
விழுப்புரம் அருகே சோழகனூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 38). இவர் அதே கிராமத்தில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை அந்த கடையில் பிரகாசின் மனைவி பரமேஸ்வரி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது ஒரு காரில் 3 பேர் வந்து இறங்கினர். அவர்கள், அந்த பேன்சி ஸ்டோருக்குள் சென்று அங்கிருந்த பரமேஸ்வரியிடம், 750 பேன்சி பொருட்கள் உள்ளது எனவும், அதன் மதிப்பு ரூ.57 ஆயிரமாகும் என்று கூறினார்கள்.
பணம் அபேஸ்
இதை நம்பிய அவர், அந்த நபர்களிடம் ரூ.57 ஆயிரத்தை கொடுத்ததும் அவர்கள் அக்கடையினுள் பேன்சி பொருட்கள் அடங்கிய பார்சலை இறக்கி விட்டு சென்றனர். பின்னர் சிறிது நேரம் கழித்து பிரகாஷ், தனது கடைக்கு வந்தார். அவர், அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அதனுள் வெறும் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 147 பொருட்கள் மட்டுமே இருந்துள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர், காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.