நாமக்கல்
ராசிபுரத்தில்நூல்மில் மேற்பார்வையாளரிடம் ரூ.30 லட்சம் நூதன மோசடி பர்தா அணிந்து தப்பிய பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு
|ராசிபுரம்:
ராசிபுரத்தில் நூல்மில் மேற்பார்வையாளரிடம் ரூ.30 லட்சத்தை நூதன முறையில் மோசடி செய்து பர்தா அணிந்து தப்பிய பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேற்பார்வையாளர்
நாமக்கல் மாவட்டம் வெப்படையை சேர்ந்தவர் சிவஞானம் (வயது 50). இவர் அப்பகுதியில் உள்ள நூல் மில்லில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு சங்ககிரியை சேர்ந்த பெண் மூலம் திருச்சியை சேர்ந்த ஒரு பெண் அறிமுகமானதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் திருச்சியை சேர்ந்த பெண் சிவஞானத்திடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகை ஏலம் விடப்பட்டு வருவதாகவும், தங்களுக்கு குறைந்த விலையில் நகை வேண்டும் என்றால் பணத்தை கொடுங்கள் வாங்கி தருகிறேன் என்று கூறினாராம். இதை நம்பிய சிவஞானம் நேற்று காரில் பணத்தை எடுத்து கொண்டு ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட் பகுதிக்கு சென்றார். பின்னர் அங்கு சுடிதார் அணிந்து நின்று கொண்டிருந்த பெண்ணை காரில் ஏற்றி கொண்டு ராசிபுரம் வந்தார்.
போலீசார் விசாரணை
இதையடுத்து அந்த பெண்ணிடம் சிவஞானம் ரூ.30 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. பணத்தை வாங்கிய பெண் ராசிபுரத்தில் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தில் நகையை வாங்கி வருவதாக கூறி உள்ளே சென்றார். ஆனால் சிறிது நேரத்தில் பர்தா அணிந்தவாறு அந்த பெண் ஆட்டோவில் ஏறி தப்பியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் திருச்செங்கோடு சாலையில் உள்ள முனியப்பன் கோவில் அருகே ஆட்டோவில் இருந்து இறங்கி அங்கு நின்ற காரில் ஏறி சென்றுவிட்டாராம்.
இதை அறிந்த சிவஞானம் இதுதொடர்பாக ராசிபுரம் போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சிவஞானம் அந்த பெண்ணிடம் ரூ.30 லட்சம் கொடுத்தது உண்மை தானா? அந்த பெண் யார்? என்று போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மில் மேற்பார்வையாளரிடம் நூதன முறையில் பணம் மோசடி செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.