நாமக்கல்
மோகனூர் பகுதியில் காவிரி ஆற்றை ஆக்கிரமித்த சீமைக்கருவேல மரங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
|மோகனூர்:
மோகனூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா என பொதுக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சீமைக்கருவேல மரங்கள்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் வழியாக காவிரி ஆறு பாய்ந்தோடுகிறது. இந்த ஆற்று பகுதியில் தற்போது அதிகளவில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளன. இதனால் காய்ந்த முள்செடிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு பள்ளமான பகுதிகளில் தேங்கி கொஞ்சம், கொஞ்சமாக முறிந்து தண்ணீரில் கிடப்பதால் ஆற்றில் குளிக்கும் பொதுமக்களின் கால்களில் கருவேல முட்கள் தைக்கும் நிலை உள்ளது.
அதேபோல் ஆற்றில் மேடு, பள்ளங்கள் உள்ளதால் தண்ணீர் ஒரே சீராக வருவதில்லை. எனவே தண்ணீர் சீராக வரும் வகையில் சீமைக்கருவேல முட்களை அகற்றியும், மேடு, பள்ளங்களை சீர் செய்தும், பாறைகள், கற்களை அப்புறப்படுத்தி சமப்படுத்தினால் மட்டுமே அனைத்து பகுதிகளிலும் சமமாக தண்ணீர் செல்லும். இதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக மோகனூர் ஒன்றியத்திற்குட்பட்ட நன்செய் இடையாறு, செங்கப்பள்ளி, கொமாரபாளையம், மணப்பள்ளி, பேட்டப்பாளையம், குமரிபாளையம், ஒருவந்தூர் மற்றும் மோகனூர் பேரூராட்சி பகுதிகளில் உள்ள காவிரி ஆற்று பகுதிகளில் ஏராளமான சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.
அசலதீபேஸ்வரர் கோவில் படிக்கட்டு
கொமாரபாளையம் காவிரி ஆற்று பகுதியில் இருந்து நாமக்கல் ஆட்டோ நகர் மற்றும் அந்த பகுதியில் உள்ள ஊராட்சி பகுதிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டம், மோகனூர் பகுதியில் இருந்து நாமக்கல் நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் திட்டமும், ஒருவந்தூர் பகுதியில் இருந்து பட்டணம், சீராப்பள்ளி கூட்டு குடிநீர் திட்டம் உள்பட பல்வேறு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி 10-க்கும் மேற்பட்ட கூட்டுறவு நீரேற்று பாசன திட்டம் மற்றும் தனியார் நீரேற்று பாசன திட்டம் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு விவசாயத்திற்கு தண்ணீர் செல்கின்றது. சீமைக்கருவேல முட்களை அகற்றி சீரான தண்ணீர் வருவதற்கு வழிவகை செய்ய வேண்டும். ஒரு சில பகுதிகளில் அதிகளவில் பள்ளம் உள்ளதால் அதில் தண்ணீர் தேங்கி உள்ளது.
மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில் படிக்கட்டு துறை அருகே பல்வேறு பகுதிகளில் இருந்து சேதமடைந்த சாமி சிலைகளை கொண்டு வந்து போட்டு சென்றுள்ளனர். மேலும் வீட்டில் சேதமடைந்த சாமி புகைப்படங்களையும் கொண்டு வந்து காவிரி ஆற்றின் ஒரு பகுதியில் போட்டு சென்று விடுவதால், கண்ணாடிகள் உடைந்து அந்த பகுதியில் செல்லும் பொதுமக்களின் கால்களில் குத்தும் நிலை உள்ளது.
குடிநீர் குழாய்கள் சேதம்
இதுகுறித்து கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சிலம்பரசன் கூறியதாவது:-
காவிரி ஆற்று பகுதிகளில் அதிகளவில் சீமைக்கருவேல மரங்கள் உள்பட பல்வேறு செடிகள், கொடிகள் வளர்ந்துள்ளதால் தண்ணீர் வரும் காலங்களில் தண்ணீர் தேக்கம் ஏற்பட்டு பள்ளமான பகுதிகளில் செல்கிறது. செடிகள் வளரும் போது வேர் பிடிப்பு அதிகமாக வருவதால், மண்ணின் மேல்பகுதி உயர்ந்து விடுகிறது. அதனால் மேடான பகுதிகளில் தண்ணீர் சீராக வருவதில்லை.
குடிநீர் திட்ட பகுதிகளில் முட்கள் அடித்து வந்து சேர்ந்து கொள்வதால், குடிநீர் குழாய்கள் சேதம் ஏற்பட்டு, அதை சீர்படுத்துவதில் சிரமம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சீமைக்கருவேல மரங்களை அகற்றி காவிரி ஆற்றை பாதுகாக்க வேண்டும்.
மேடு, பள்ளங்களை சீரமைக்க வேண்டும்
மணப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி:-
மணப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட காவிரி ஆற்று பகுதிகளில் இருந்து மணப்பள்ளி ஊராட்சி மற்றும் பெரமாண்டம் பாளையம் ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் செல்கிறது. அதேபோல் நீரேற்று பாசன சங்கம் மூலம் அந்த பகுதியில் உள்ள ஏராளமான விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்கிறது. இந்த பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் காவிரி ஆற்றை மறைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.
அது மட்டும் இன்றி காவிரி ஆறு ஒரே சீராக இல்லாமல் அதிகளவில் மேடு, பள்ளங்களாக உள்ளது. இதனால் காவிரி ஆற்றில் செல்பவர்கள் நிலைதடுமாறி விழுந்து விடுகின்றனர். மேலும் குடிநீர் மற்றும் விவசாய பகுதிக்கு செல்லும் தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. காவிரி ஆற்றில் மேடு, பள்ளங்களை சமப்படுத்தி சரி செய்ய வேண்டும். அதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேதமடைந்த சாமி சிலைகள்
மோகனூர் அக்ரஹாரத்தை சேர்ந்த அர்த்தனாரீஸ்வரன்:-
அசலதீபேஸ்வரர் கோவில் படிக்கட்டு அருகே நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க அமாவாசை தினங்களில் வருவார்கள்.
இந்த நிலையில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கோவில்களில் சேதமடைந்த சாமி சிலைகளை கொண்டு வந்து காவிரி ஆற்றின் படிக்கட்டு துறை அருகே போட்டு விட்டு சென்று விடுகின்றனர். இதனால் இரவு நேரங்களில் காவிரி ஆற்றிற்கு புதிதாக வருபவர்கள் சாமி சிலைகளை மிதிக்கும் நிலை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி தங்கள் வீடுகளில் சேதமடைந்த சாமி படங்களையும் காவிரி ஆற்றில் கொண்டு வந்து கண்ணாடியுடன் போட்டு விட்டு சென்று விடுவதால், கண்ணாடி துகள்கள் உடைந்து காவிரி ஆற்றில் நடக்கும்போது பொதுமக்கள் கால்களில் குத்தி காயம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் காவிரி ஆற்றில் போடப்பட்ட சேதமடைந்த சாமி சிலைகள் மற்றும் பெரிய கற்கள், கண்ணாடி துகள்கள், சீமைக்கருவேல மரங்கள் ஆகியவற்றை அகற்றி சமப்படுத்தி பொதுமக்கள் பயன்படும் வகையில் சீர் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.