< Back
மாநில செய்திகள்
மோகனூரில்   முக்கோண வடிவ ரவுண்டானாவால் போக்குவரத்து நெரிசல்  மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
நாமக்கல்
மாநில செய்திகள்

மோகனூரில் முக்கோண வடிவ ரவுண்டானாவால் போக்குவரத்து நெரிசல் மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
11 Oct 2022 12:15 AM IST

மோகனூரில் முக்கோண வடிவ ரவுண்டானாவால் போக்குவரத்து நெரிசல் மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மோகனூர்:

மோகனூரில் முக்கோண வடிவ ரவுண்டானாவால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வட்ட வடிவில் ரவுண்டானாவை மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவில்களின் நகரம்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் காவிரி ஆறு ஓடுகிறது. இங்கு நாமக்கல் மாவட்டத்தையும், கரூர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றில் தமிழகத்திலேயே மிக நீளமான 1.3 கி.மீட்டர் தூரம் கொண்ட தரைவழி பாலமும், மோகனூர்- கரூர் செல்லும் ரெயில் பாலமும், ரெயில் நிலையமும் உள்ளது, அதுமட்டுமின்றி மோகனூரில் பிரசித்திபெற்ற அசலதீபேஸ்வரர், மதுக்கரவேணி அம்பாள் கோவில், வெங்கட்ரமண பெருமாள் கோவில், காந்தமலை முருகன் கோவில், நவலடியான் கோவில், காளியம்மன் கோவில், வள்ளியம்மன் கோவில், ராகவேந்திரா ஆலயம், குறிக்கார கருப்பண்ணசாமி கோவில், பகவதியம்மன், மாரியம்மன் கோவில் என கோவில் நகரமாகவே விளங்கி வருகிறது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி ராசிபுரம், நாமக்கல், எருமப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்டம் மல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைத்து பூஜை செய்யப்படும் ஆயிரக்கணக்கான சிலைகள் மோகனூர் காவிரி ஆற்றில் தான் கரைக்கப்படும். இதேபோல் அமாவாசை தினங்களில் குறிப்பாக ஆடி, புரட்டாசி அமாவாசைகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மோகனூர் காவிரி ஆற்றுக்கு வந்து தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். இதனால் மோகனூரில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும்.

அடிக்கடி விபத்து

இந்த நிலையில் மோகனூரில் இருந்து நாமக்கல் வரை 13 கி.மீட்டர் தூரம் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம் சார்பில் ரூ.63 கோடியே 95 லட்சம் திட்ட மதிப்பீட்டில் சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணி கடந்த 2017-ம் ஆண்டு நிறைவுபெற்றது, அப்போது மோகனூர் மையப்பகுதியில் முக்கோண வடிவிலான 2 ரவுண்டானாக்கள் அமைக்கப்பட்டன,

இந்த ரவுண்டானாக்கள் அமைக்கும் போதே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட துறையினரிடம் ஒரே ரவுண்டானாவாக அமைக்க வேண்டும் என கோரி மனுக்கள் அளித்தும், நேரில் பேசியும் இருந்தனர். ஆனால் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு விட்டது என கூறி 2 முக்கோண வடிவிலான ரவுண்டானாவாக அமைத்து விட்டனர்.

இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக நாமக்கல் பகுதியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் வந்த வேகத்தில் திரும்ப முடியாமல், பின்னோக்கி சென்று மீண்டும் திரும்பும் நிலை உள்ளது. அந்த நேரத்தில் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, குறிப்பாக காலை, மாலை நேரங்களில் அதிகளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் வட்ட வடிவிலான ஒரே ரவுண்டானாவாக அமைக்க வேண்டும் என அந்த பகுதி சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கரும்பு லோடு வாகனங்கள்

இதுகுறித்து விவசாய சங்க பிரதிநிதி நவலடி கூறியதாவது :-

மோகனூரின் மைய பகுதியில் 2 முக்கோண வடிவிலான ரவுண்டானா அமைக்கப்பட்டு உள்ளது இதனால் நீளமான வாகனங்கள் வந்து திரும்ப முடியவில்லை. சர்க்கரை ஆலைக்கு கரும்பு லோடு ஏற்றி வரும் கனரக வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இந்த இடத்தில் திரும்புவது சிரமமாக இருந்து வருகிறது. எனவே இந்த 2 ரவுண்டானாக்களையும் அப்புறப்படுத்தி விட்டு, வட்ட வடிவிலான ஒரே ரவுண்டானாவாக அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

உரிய நடவடிக்கை

அந்த பகுதியில் கடை நடத்தி வரும் பூபதி கூறியதாவது:-

முக்கோண வடிவிலான ரவுண்டானாக்களால் சாலை அமைத்த காலத்தில் இருந்து எந்த பகுதியில் செல்வது என தெரியாமல் வெளியூரை சேர்ந்தவர்கள் தடுமாறும் சூழ்நிலை உள்ளது. அதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. குறிப்பாக அதிக அளவில் லோடுகள் ஏற்றி வரும் லாரிகள் திரும்ப முடியாமல் சிரமப்பட்டு, திரும்பி செல்லும் சூழ்நிலை உள்ளது. அதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

ஒரு சில வாகனங்கள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் நேராக கடையை நோக்கி வரும் ஆபத்தும் உள்ளது, எனவே இந்த 2 முக்கோண வடிவிலான ரவுண்டானாவையும் அகற்றிவிட்டு வட்ட வடிவிலான ரவுண்டானா அமைக்க வேண்டும். அப்போது தான் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும், விபத்துக்கள் இல்லாமலும் மக்கள் பயணிக்க முடியும். சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்