''தேசியக்கொடியின் மாண்பை உலகம் அறிய செய்துவிட்டார் மோடி'' - மத்திய மந்திரி எல்.முருகன்
|‘‘தேசியக்கொடியின் மாண்பை உலகம் அறிய செய்துவிட்டார், மோடி’’, என மத்திய மந்திரி எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை,
75-வது சுதந்திர தின பெருவிழாவையொட்டி, வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை இல்லங்களில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடும்படி பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்தார். அதன்படி இல்லங்கள், கடைகள்தோறும் மக்கள் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறர்கள்.
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இல்லங்களில் மட்டுமல்லாமல் தமிழகம்-புதுச்சேரி தழுவிய 5,800 பெட்ரோல் நிலையங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்படும் என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்தது. இதன் ஒரு கட்டமாக சென்னை தாசபிரகாஷ் அருகேயுள்ள பெட்ரோல் 'பங்க்'கில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி தலைமை தாங்கினார். இதில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்துகொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
இந்த விழாவில் எல்.முருகன் பேசியதாவது,
பிரதமர் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இல்லங்கள்தோறும் மக்கள் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின அமுத பெருவிழாவை கொண்டாடி வருகிறார்கள். அந்தவகையில் தேசியக்கொடியின் மாண்பை உலகம் அறிய செய்துவிட்டார், பிரதமர் மோடி.
தேசிய கொடிக்கு தனி பெருமை உண்டு. அந்த பெருமையை இன்றைய தினம் மக்கள் வீடுதோறும் அனுபவித்து வருகிறார்கள். கட்டபொம்மன், பூலித்தேவன், வ.உ.சி., திருப்பூர் குமரன் என சுதந்திரத்துக்கு போராட்டத்தில் அங்கம் வகித்த தமிழர்கள் ஏராளம். இந்த தியாகிகளின் தியாகத்தை, வீரத்தை எதிர்கால தலைமுறையினர் அறியவே பிரதமர் இந்த மாபெரும் அழைப்பை விடுத்தார். இதனை சாத்தியமாக்கி தந்த மக்களுக்கு நன்றி.
தமிழகத்தில் 1000-க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராளிகள் இருந்தனர். அதில் 200-க்கும் மேற்பட்டோர் அறியப்படாத வீரர்கள் உள்ளனர். அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான ஒண்டி வீரனின் தபால்தலை அவரது நினைவு தினமான வரும் 20-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வெளியிடப்படும்.