மோடி அரசு கூட்டாட்சி தத்துவத்தை கேள்விக்குறியாக மாற்றி உள்ளது - காங்கிரஸ் தலைவர் அழகிரி
|மோடி அரசு கூட்டாட்சி தத்துவத்தை கேள்விக்குறியாக மாற்றி உள்ளது என காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்தார்.
டெல்லி சென்றார்
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி மாநில நிர்வாகிகளுடன் வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு கையாளுவது?, எப்படி எதிர்கொள்வது? என கலந்தாலோசிப்பது நல்ல முயற்சி. இந்த முயற்சி நல்ல பலனை தரும் என எதிர்பார்க்கிறோம். கடந்த தேர்தலைவிட கூடுதல் சீட்டுகளை நிச்சயமாக கேட்போம்.
கூட்டாட்சி தத்துவம்
மோடி அரசாங்கம் கடந்த 9 ஆண்டுகளாக தமிழகத்துக்கு எந்த திட்டத்தையும் வழங்கவில்லை. கூட்டாட்சி தத்துவத்தில் அது முறை கிடையாது. 9 சதவீதத்துக்கு மேல் மத்திய வரியை செலுத்துகிறோம். ஆனால் 2 சதவீதத்துக்கும் குறைவாகதான் உதவி செய்கின்றனர். இதில் கூட்டாட்சி என்று பேசுவதற்கு பொருள் இல்லை. எல்லா மாநிலங்களுக்கும் எந்த விகிதாச்சார அடிப்படையில் நிதி வழங்கப்படுகிறதோ அதுபோல் தமிழகத்துக்கும் வழங்க வேண்டும். ஆனால் 9 ஆண்டுகளில் உத்தரபிரதேசத்துக்கு மட்டும் 10 எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகள் தந்து உள்ளார். தமிழகத்துக்கு ஒன்று கூட தரப்படவில்லை.
தமிழகத்தில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப மத்திய அரசுக்கு கட்டுகின்ற வரிக்கு ஏற்ப சாலைகளை வழங்கி இருக்க வேண்டும். துறைமுகங்களை எதையும் நவீனப்படுத்த வில்லை. இதன் மூலம் கூட்டாட்சி தத்துவத்தை கேள்விக்குறியாக மோடி அரசு மாற்றி உள்ளது. இது சம்பந்தமாக விவாதிக்கப்படும்.
கட்சிகளை உடைக்கிறது
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக உள்ள அரசியல் கட்சிகளை உடைப்பது, உடைக்க முடியாத கட்சிகளுக்கு தொந்தரவு தருவது போன்ற வேலைகளை பா.ஜ.க. அரசு செய்து வருகிறது. மராட்டியத்தில் சிவசேனா, சரத்பவார் கட்சிகளை இரண்டாக உடைத்து உள்ளனர். தி.மு.க.வை உடைக்க முடியாததால் அரசுக்கு தொந்தரவு தருகின்றனர். மணிப்பூர், அரியானா ஆகிய மாநிலங்களில் மதகலவரங்களை தூண்டிவிட்டு உள்ளனர். தேர்தலை மையமாக வைத்து செய்கிற செயல். இதற்கு எதிராக விவாதிக்கப்படும். இந்தியா கூட்டணி கட்சிகளின் முதல் 2 கூட்டங்களை விட 3-வது கூட்டத்தின் போது அதிக பலன்கிடைக்கும்.
பூனை குட்டி
தேசிய அளவில் காங்கிரஸ்- பா.ஜ.க. என போட்டி போடுகிறது. தமிழகத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. என இருக்கிறது. இந்த 2 கட்சிகளில் ஏதாவது ஒன்றை தான் மக்கள் தேர்ந்து எடுக்க முடியும். ஆனால் தி.மு.க.-காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடுவது தவறு என்றால் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணிக்கு சீமான் ஓட்டு போட சொல்கிறாரா?. பூனை குட்டி வெளியே வந்து விட்டது. தான் யார் என்பதை சீமான் காட்டி விட்டார்.
மணிப்பூர், அரியானா ரெயிலில் நடந்த சம்பவங்கள் எல்லாமே ஆர்.எஸ்.எஸ். மத வெறியை தூண்டி விட்டதால்தான் அப்பாவி மக்கள் பலியாகின்றனர். எப்போதும் ஆர்.எஸ்.எஸ்.- பாரதீய ஜனதா நிலைப்பாடே அது தான். நாடு பிரிவினை முடிந்து சுதந்திரம் பெற்ற போது இதுபோன்ற கலவரத்தை உண்டாக்கினார்கள். மகாத்மா காந்தி அங்கு சென்று சரி செய்தார். அது போல் மணிப்பூருக்கு பிரதமர் செல்ல மறுக்கிறார். ஆனால் ராகுல் காந்தி சென்று உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.