< Back
மாநில செய்திகள்
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் விஜயதரணி
மாநில செய்திகள்

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் விஜயதரணி

தினத்தந்தி
|
25 Feb 2024 7:18 AM IST

விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி நேற்று பா.ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முக்கிய தலைவர்கள் தங்களது சொந்த கட்சியை விட்டுவிட்டு எதிரணிக்கு தாவி வருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதரணி நேற்று திடீரென பா.ஜனதாவில் சேர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ந்து 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டவர் விஜயதரணி. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கொள்ளுப்பேத்தி என்ற அடையாளத்தோடு தேர்தலில் களம் இறங்கிய இவர் வெற்றி மேல் வெற்றியை குவித்து, அரசியலில் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார்.

இந்த நிலையில் சமீபகாலமாக காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்து வந்தார். இதனால் அவர் பா.ஜனதாவில் சேரப்போவதாக தகவல்கள் பரவின.

இந்த நிலையில் விஜயதரணி நேற்று திடீரென டெல்லியில் உள்ள பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு சென்று, தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.

இணைப்பு நிகழ்ச்சியின்போது, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் முதல் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக கட்சித்தலைமைக்கு எழுதிய கடிதத்தை விஜயதரணி செய்தியாளர்களிடம் காண்பித்தார்.

இதனிடையே கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி, ஒரு அரசியல் கட்சியின் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியில் இருந்து வேறு அரசியல் கட்சிக்கு தாவினால் அவர்களின் பதவி பறிக்கப்பட்டு விடும் என்ற விதியின் அடிப்படையில் விஜயதரணியின் எம்.எல்.ஏ. பதவியை உடனடியாக தகுதி நீக்கம் செய்து அறிவிக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு எம்.எல்.ஏ. மட்டுமல்லாமல் அக்கட்சியின் சட்டசபை கொறடாவாகவும் விஜயதரணி இருந்தார். ஒரு கட்சியில் இருந்து எம்.எல்.ஏ. யாரும் விலகி வேறு கட்சியில் சேர்ந்தால், அவர் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யும்படி சபாநாயகருக்கு அந்தக் கட்சியின் கொறடாதான் கடிதம் கொடுப்பார். ஆனால் கொறடாவே கட்சி தாவி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய விஜயதரணி, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் அப்பாவு-க்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும் செய்திகள்