ராமநாதபுரம்
அரசு பள்ளிகளில் எம்.எல்.ஏ. ஆய்வு
|அரசு பள்ளிகளில் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.
தொண்டி,
திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கருமாணிக்கம் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் சார்பில் அரசு ஆஸ்பத்திரிக்கு போதிய டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்களை நியமனம் செய்து 24 மணி நேரமும் மருத்துவ வசதி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார். இப்பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 2 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. பின்னர் சோழகன் பேட்டை அரசு உயர்நிலை பள்ளி, தீர்த்தாண்டதானம் கடற்கரை பகுதியில் ஆய்வு செய்தார். பின்னர் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சென்று பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், திருவாடானை தொகுதியில் கிராம சாலைகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதாகும். இந்த சாலைகளை புதிய தார்சாலைகளாக அமைக்க வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளேன் என்றார். அப்போது திருவாடானை யூனியன் தலைவர் முகமது முக்தார், வட்டார காங்கிரஸ் தலைவர் கோடனூர் கணேசன், திருவாடானை தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ஒடவயல் ராஜாராம், மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் முருகானந்தம், மீனவர் பிரிவு செயலாளர் முத்துராக்கு, தொண்டி நகர் காங்கிரஸ் தலைவர் காத்தராஜா, ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன் ராஜா, கட்டவிளாகம் ஊராட்சி தலைவர் ஆறுமுகம், துணை தலைவர் சித்தநாதன், திருவாடானை நகர் காங்கிரஸ் தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.