< Back
மாநில செய்திகள்
இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் தேர்தல் பிரசாரமாக நடத்த கழக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு
மாநில செய்திகள்

'இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்' தேர்தல் பிரசாரமாக நடத்த கழக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

தினத்தந்தி
|
23 Feb 2024 4:54 PM IST

மனக்கசப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு ‘வெற்றிதான் இலக்கு’ என்பதை மனதில் வைத்து உழைக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ள முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் இதுவரை காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளன.

2-வது கட்ட பேச்சுவார்த்தை அடுத்தகட்டமாக நாளை துவங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கூட்டணி கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்டு தி.மு.க.விடம் கடிதம் கொடுத்துள்ளன.

இதனால் இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிட இருக்கும் தொகுதிகளில் சில மாற்றங்கள் இருக்கும் என தெரிகிறது. இந்த சூழ்நிலையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நடத்திய இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், 72 மாவட்டச் செயலாளர்கள் 234 தொகுதி பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்ட தேர்தல் கள நிலவரம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசித்தார். நாடாளுமன்ற தேர்தல் பணிகள் எந்த அளவுக்கு உள்ளது? பி.எல்.ஏ. 2 பாக முகவர்கள், நிர்வாகிகள் சரிவர செயல்படுகிறார்களா? என்பதையும் கேட்டறிந்தார்.

இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது,

நாடாளுமன்ற தேர்தலில் நாம் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். கூட்டணி கட்சியினருக்கு விரைவில் தொகுதி உடன்பாடு செய்யப்பட உள்ளது.

எனவே அவர்கள் நிற்கும் தொகுதியிலும் அதே உணர்வோடு நாம் பணியாற்றி வெற்றிபெற வைக்க வேண்டும். இதில் எந்தவித புகாருக்கும் இடம் அளிக்க கூடாது. புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பணிகள் திருப்தியாக இருப்பதாக தெரிய வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் மட்டும் சிறு, சிறு பிரச்சினைகள் இருப்பதாக தெரிகிறது. எனவே மனக்கசப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு 'வெற்றிதான் இலக்கு' என்பதை மனதில் வைத்து நீங்கள் உழைக்க வேண்டும்.

கலைஞர் நினைவிடம் திறப்பு விழா வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவை நிகழ்ச்சி போல் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் நீங்களும் வந்து பங்கு பெற வேண்டும். இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் 26-ந் தேதி முதல் வீடு வீடாக தேர்தல் பிரசாரமாக நடத்த வேண்டும்.

பாரதிய ஜனதாவின் அநீதிகள், கழக அரசின் சாதனைகள், பட்ஜெட் அம்சங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அடிமட்ட தொண்டர் வரையிலான அனைத்து விவரங்களும் தலைமைக்கு தெரியும், தேர்தலுக்கு பிறகு பல மாற்றங்களை கழகத்திலும், அரசியலிலும் எதிர்பார்க்கலாம். நாடாளுமன்ற தொகுதி வாரியாக உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் கூட்டங்களை மிக சிறப்பாக நடத்திய மாவட்ட செயலாளர்களை பாராட்டுகிறேன். தேர்தல் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. 4 ஆயிரத்துக்கும் அதிகமான கோரிக்கைகள் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிற்கு வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்