< Back
மாநில செய்திகள்
ஆவடியில் காணாமல் போன வாலிபர் - செம்பரம்பாக்கம் ஏரியில் பிணமாக மீட்பு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

ஆவடியில் காணாமல் போன வாலிபர் - செம்பரம்பாக்கம் ஏரியில் பிணமாக மீட்பு

தினத்தந்தி
|
13 May 2023 2:35 PM IST

ஆவடியில் காணாமல் போன வாலிபர் செம்பரம்பாக்கம் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார்.

செம்பரம்பாக்கம் ஏரியில் 5-வது மதகு பகுதியில் பிணம் ஒன்று மிதந்து கொண்டிருப்பதாக நசரத்பேட்டை போலீசாருக்கு வந்த தகவலையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ஏரியில் இறந்த நிலையில் மிதந்து கொண்டிருந்த பிணத்தை போலீசார் மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்து போன நபர் ஆவடி, கோவில் பதாகை, பாரதி நகரை சேர்ந்த விக்னேஷ்வர் (வயது 28), என்பதும் இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தது தெரிந்தது.

மேலும் அவர் அங்கு தன்னுடன் பணிபுரிந்த பெண்ணை காதலித்து வந்த நிலையில் அந்த பெண் இவரை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் கடந்த சில தினங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மோட்டார் சைக்கிளில் வந்த விக்னேஷ் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். பிணமாக மீட்கப்பட்ட விக்னேஷ்வரை காணவில்லை என இவரது பெற்றோர் ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இறந்து போன விக்னேஸ்வர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து நசரத்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்