< Back
மாநில செய்திகள்
காணாமல் போன வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்பு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

காணாமல் போன வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்பு

தினத்தந்தி
|
7 Oct 2023 11:02 PM IST

பெரம்பலூர் அருகே காணாமல் போன வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.

பெரம்பலூர் அருகே குரும்பலூர் தோப்பு தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி செல்லம்மாள். இவர்களுக்கு ராமகிருஷ்ணன் (வயது 35) என்ற ஒரு மகன் இருந்தார். ராமகிருஷ்ணன் பெரம்பலூரில் கயிறு மண்டியில் ஒன்றில் வேலை செய்து வந்தார். அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் மன வேதனையில் இருந்து வந்த அவர் கடந்த 4 நாட்களாக வேலைக்கும் செல்லவில்லையாம். ராமகிருஷ்ணன் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் உணவு சாப்பிட்டு விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் ராமகிருஷ்ணனை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் குரும்பலூரில் பாளையத்தை சேர்ந்த சிதம்பரம் என்பவரது விவசாய கிணற்றில் ராமகிருஷ்ணனின் பிணமாக மிதந்து கொண்டிருந்தார். இது குறித்து தகவலறிந்த ராமகிருஷ்ணனின் பெற்றோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் ராமகிருஷ்ணனின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இது குறித்து தகவலறிந்து வந்த பெரம்பலூர் போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து ராமகிருஷ்ணனின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் ராமகிருஷ்ணன் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. ராமகிருஷ்ணன் இயற்கை உபாதை கழித்து விட்டு கழுவதற்கு கிணற்றுக்குள் இறங்கிய போது தவறி விழுந்ததில் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்