ஈரோடு
5 செல்போன் கோபுரங்களை காணவில்லை
|கோபி பகுதியில் 5 செல்போன் கோபுரங்களை காணவில்லை.
கடத்தூர்:
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கோசலகுமார் (வயது 49). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பிராஜெக்ட் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் அந்த தனியார் நிறுவனம் கடந்த 2010-ம் ஆண்டு செல்போன் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்களை வாங்கி உள்ளது. அதில் கோபி அருகே உள்ள ஒத்தகுதிரை, தண்ணீர்பந்தல் புதூர், நல்லகவுண்டன்பாளையம், கள்ளிப்பட்டி பிரிவு மற்றும் மொடச்சூர் ராஜன்நகர் ஆகிய 5 இடங்களில் செல்போன் நிறுவனம் அமைந்திருந்த செல்போன் கோபுரம் மற்றும் கட்டுப்பாட்டு அறையை சுமார் ரூ.1½ கோடிக்கு விலைக்கு வாங்கி உள்ளது.
இவை அனைத்தும் கடந்த 2017-ம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்த நிலையில் அதன் பின்னர் இயங்கவில்லை. இதனால் தனியார் நிறுவனத்தின் பிராஜெக்ட் என்ஜினீயர் கோபி மற்றும் சுற்றுப்புற பகுதியில் வாங்கப்பட்ட செல்போன் கோபுரங்கள் இயங்காமல் போனது குறித்து ஆய்வு செய்தார். அப்போது 5 இடங்களில் பொருத்தப்பட்டு இருந்த டவர்கள் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது
அதைத்தொடர்ந்து அவர் காணாமல் போன செல்போன் கோபுரங்களை கண்டு்பிடித்து தருமாறு கோபியில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1-ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன 5 செல்போன் கோபுரங்களை தேடி வருகின்றனர்.