நாமக்கல்
மின்சாரம் தாக்கி லாரிபட்டறை தொழிலாளி பரிதாப சாவு
|நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி லாரி பட்டறை தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
லாரி பட்டறை தொழிலாளி சாவு
நாமக்கல் - சேலம் ரோடு முருகன் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் வசித்து வந்தவர் செல்வராஜ் (வயது45). இவர் முதலைப்பட்டிபுதூரில் உள்ள லாரி பட்டறை ஒன்றில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் செல்வராஜ் லாரி பட்டறையில் வெல்டிங் வேலை செய்து கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை சக தொழிலாளர்கள் மீட்டு, சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழுவினர், செல்வராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
போலீசார் விசாரணை
இதை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.