100 நாள் வேலை திட்டத்தில் ரூ.60 லட்சம் முறைகேடு: பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
|100 நாள் வேலை திட்டத்தில் ரூ.60 லட்சம் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில்(100 நாள் வேலை) முறைகேடு நடப்பதாகவும், பயனாளிகளின் அறியாமையை பயன்படுத்தி அவர்களின் வங்கி கணக்கில் வரும் பணத்தை ஊராட்சி மன்ற தலைவர் கைரேகை வாங்கி முறைகேடாக பணத்தை பெற்றுக்கொள்வதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த அதே கிராமத்தை சேர்ந்த வீரபாண்டியன், ஊராட்சி மன்ற தலைவரிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக நேற்று காலை வீரபாண்டியனை விருத்தாசலம் போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் குப்பநத்தம் கிராமத்துக்கு செல்லும் மினிபஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த கேனில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைபார்த்த அருகில் இருந்தவர்கள் அவர் வைத்திருந்த கேனை பிடுங்கி எறிந்தனர். மேலும் அவர் மீது தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.60 லட்சத்திற்கும் மேல் முறைகேடு நடந்துள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேட்டை தட்டிக்கேட்டதால் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட வீரபாண்டியனை விடுவிக்க வேண்டும் என்றனர்.
அதற்கு போலீசார், இதுதொடர்பாக விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுங்கள். நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதன் பேரில் கிராம மக்கள் சிறைபிடித்து வைத்திருந்த மினி பஸ்சை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.