
தஞ்சாவூர்
தமிழகத்தில் தான் சிறுபான்மையினர் அதிக பாதுகாப்புடன் உள்ளனர்

தமிழகத்தில் தான் சிறுபான்மையினர் அதிக பாதுகாப்புடன் உள்ளனர்
தமிழகத்தில் தான் சிறுபான்மையினர் அதிக பாதுகாப்புடன் உள்ளனர் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறைசார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வரவேற்றார்.
கூட்டத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். விழாவில், தையல் எந்திரம், கிரைண்டர், சிறுதொழில் நிதி உதவி, விலையில்லா மிதிவண்டி, நல வாரிய உறுப்பினர் அட்டை என மொத்தம் 162 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சத்து 7 ஆயிரத்து 945 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
எம்.எல்.ஏ.க்கள்
கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், அண்ணாதுரை, ஜவாஹிருல்லா, மேயர் சண்.ராமநாதன், துணைமேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, அரசு டவுன் காஜி சையத் காதர்உசேன் மற்றும் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
முடிவில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரேணுகாதேவி நன்றி கூறினார்.
பேட்டி
பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் சம்பந்தமாக ஆய்வு கூட்டம் நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிவாசல், தேவாலயம் பராமரிப்பதற்காக நிதி வழங்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினருக்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையிலான அரசு 3.5 சதவீதம் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கியது. கல்வியை விட்டு விடாமல் தொடர்ந்து கற்க வேண்டும் என்பதற்காக புதுமைப்பெண் திட்டம், தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை சிறுபான்மையினர் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதிக பாதுகாப்பு
கோவை குண்டுவெடிப்பு சம்பந்தமாக நீண்ட நாட்களாக சிறையில் இருப்பவர்கள் விடுதலை தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் முடிவின் அடிப்படையில் தான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சிறுபான்மை மக்கள் அதிக பாதுகாப்புடன் உள்ளனர்.
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை போன்றவர்கள் கல்வி அறிவு பெற்றிருக்கிறார்கள் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, அம்பேத்கர், காமராஜர், கருணாநிதி போன்றவர்கள் உழைத்த உழைப்பு தான் காரணம். இடஒதுக்கீடு மூலம் கல்வி கற்ற ஒருவர் இந்த அரசை விமர்சிப்பதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.