திருவள்ளூர்
மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்
|மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூரில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர். கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
இதைதொடர்ந்து நேற்று தேரோட்டம் நடந்தது. வண்ண துணிகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெருந்தேவி தாயாருடன் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார் இதையடுத்து பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிறுணியம்பலராமன், பொன்ராஜா, மீஞ்சூர் கிராம தேர் திருவிழா குழுவினர் மற்றும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் நான்கு மாட வீதிகளில் பெருமாள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள போந்தவாக்கத்தில் புகழ் பெற்ற கமலவல்லி நாயிகா சமேத கரியமாணிக்க பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார்.
நேற்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.