புதுக்கோட்டை
வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர்கள் ஆய்வு
|வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகள், அன்னவாசல் தந்தை பெரியார் சமத்துவபுரத்தில் 92 வீடுகள் ரூ.62.640 லட்சம் மதிப்பீட்டில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெறுவதையும், சமத்துவபுரத்தில் சிட்டு என்ற பயனாளியின் வீட்டில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, மாவட்ட கலெக்டர் கவிதாராமு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேமாவதி, ஆனந்தன், ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி, ஒன்றிய செயலாளர் மாரிமுத்து மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விராலிமலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதாராமு தலைமையில் ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. அமைச்சர் மெய்யநாதன் முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு பேசினார். முன்னதாக விராலிமலை ஒன்றியம், ராஜாளிப்பட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.8.21 லட்சத்தில் அம்மன் ஊரணி மேம்பாட்டு பணியையும், விராலிமலை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தில் ரூ.28 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டிடத்தினை அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் பார்வையிட்டு பணிகளை தரமானதாகவும், விரைந்து முடிக்குமாறும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதபிரியா, விராலிமலை ஒன்றியக்குழு தலைவர் காமுமணி, ஒன்றிய குழு உறுப்பினர் சத்தியசீலன், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், திட்ட அலுவலர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுவாமிநாதன், கலைச்செல்வி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கந்தர்வகோட்டை ஒன்றியத்திற்கு வருகை தந்த அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் தமிழ்நாடு ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.