< Back
மாநில செய்திகள்
கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட பெண்களுக்கு ஏ.டி.எம். கார்டுகள்
திருப்பூர்
மாநில செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட பெண்களுக்கு ஏ.டி.எம். கார்டுகள்

தினத்தந்தி
|
15 Sep 2023 1:26 PM GMT

திருப்பூர் மாவட்டத்தில் மாதம் ரூ.1,000 பெறும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் தொடங்கி வைத்து மகளிருக்கு ஏ.டி.எம். கார்டுகளை வழங்கினார்கள்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் மாதம் ரூ.1,000 பெறும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் தொடங்கி வைத்து மகளிருக்கு ஏ.டி.எம். கார்டுகளை வழங்கினார்கள்.

மகளிர் உரிமை திட்டம்

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று காலை திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே நிழலியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் உரிமைத்தொகை பெறும் மகளிருக்கு வங்கி ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் மகளிர் உரிமைக் கையேடுகளை வழங்கினார்கள்.

உதவித்தொகை வராவிட்டால் பரிசீலனை

நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ஏற்கனவே மாவட்டத்தில் மாத உதவித்தொகை பெறுகின்ற வகையில் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் விண்ணப்பங்கள் இரண்டு கட்டங்களாக பெறப்பட்டன. அந்த விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தமிழ்நாடு அரசுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு அதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.1,000 வங்கிக்கணக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

விதிமுறைக்கு உட்பட்ட அனைத்து மகளிருக்கும் இந்த உரிமைத்தொகை வழங்கப்பட இருக்கிறது. யாருக்கேனும் விடுபட்டு இருக்கிறது என்ற சந்தேகம் வரும்பட்சத்தில் நிச்சயமாக மீண்டும் அதை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே உரிமைத்தொகை வரவில்லை என்றால் தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த நேரத்தில் உத்தரவாதத்தை நான் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் குடும்பத்தின் நன்மைக்கும், அதன் மூலமாக இந்த நாட்டின் நன்மைக்கும் பயன்பட வேண்டும். நீங்கள் உழைப்பதற்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதற்காக இந்த தொகையை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பெண்கள் முன்னேற்றம் அடைய சிறப்பான திட்டத்தை அறிவித்த முதல்-அமைச்சருக்கு நன்றி.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

தோழி விடுதி திட்டம்

அமைச்சர் கயல்விழி பேசும்போது, 'கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் 1கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயனடைகிறார்கள். பெண்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும். உங்களுடைய உரிமையை நீங்கள் விட்டுக்கொடுக்கக்கூடாது. உங்கள் உரிமைகளை பெற வேண்டும் என்றால் கல்வி அவசியம். வேலைக்கு செல்லும் மகளிருக்கு தோழி விடுதி திட்டம் தற்போது 9 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது' என்றார்.


மேலும் செய்திகள்