சென்னை
கோடம்பாக்கம், அடையாறு பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் பணிகளை அமைச்சர்கள் ஆய்வு
|சென்னை கோடம்பாக்கம், அடையாறு பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மழைநீர் வெளியேற்றும் பணிகளை அமைச்சர்கள் நாள்தோறும் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்காத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர், சென்னை கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டலங்களில் நேற்று முக்கியமான ஆறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கோடம்பாக்கத்தில் திவான் பாஷ்யம் தெருவில் மேற்கொள்ளப்பட்டு வரும் உந்து நிலையம் அமைக்கும் பணிகளையும், அங்கு தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றும் பணிகளையும் அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதைத்தொடர்ந்து சைதாப்பேட்டை-ஆலந்தூர் மேம்பாலம் பகுதியில் அடையாற்றில் வெள்ளநீர் வெளியேறுவதையும், அடையாறு மண்டல இணைப்பு சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளையும், மசூதி காலனி புதிய தெருவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மழைநீர் வடிகாலில் மழைநீர் வெளியேறுவதையும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
பின்னர் கோடம்பாக்கம் டாக்டர் ராமசாமி சாலையில் புதியதாக அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் எம்.ஜி.ஆ.ர் கால்வாயில் இணையும் பகுதியில் மழைநீர் தங்கு தடையின்றி வெளியேறுவதையும், 2021-ம் ஆண்டு பருவமழையின் போது அதிகமாக பாதிக்கப்பட்ட ராஜமன்னார் சாலையில் தற்போது புதிதாக அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளின் காரணமாக மழைநீர் தங்கு தடையின்றி வெளியேறுவதையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.