சென்னை
சென்னையில் மழைநீர் அகற்றும் பணிகளை அமைச்சர்கள் ஆய்வு
|சென்னையில் மழைநீர் அகற்றும் பணிகளை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அமைச்சர்கள் ஆய்வு
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை தொடர்ந்து கடந்த மாதம் 31-ந்தேதி முதல் கடந்த 2-ந்தேதி வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் பருவமழை பரவலாக பெய்துள்ளது. இந்தநிலையில் நகரில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றும் வகையில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதன்படி, ராயபுரம் வார்டு 61-க்குட்பட்ட வேலாயுதம் தெரு, எல்.ஜி. சாலை, மாண்டியத் சாலை ஆகிய பகுதிகளிலும், வார்டு 60-க்குட்பட்ட மின்ட், மூக்கர் நல்லமுத்து தெரு, வார்டு 55-க்குட்பட்ட செயின்ட் சேவியர் சாலை, திரு.வி.க.நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பெரியார் நகர் மருத்துவமனை, எஸ்.ஆர்.பி. காலனி, வார்டு 64-க்குட்பட்ட கம்பர் நகர், ஜி.கே.எம். காலனி ஆகிய பகுதிகளை பார்வையிட்டு மழைநீர் தேக்கமின்றி சாலைகள் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாத வகையில் சீரான நிலையில் உள்ளதையும், சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதையும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
நிரந்தர தீர்வு
அதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 2021-ம் ஆண்டு வடகிழக்குப் பருவமழையின் போது சென்னையில் பல பகுதிகளில் வரலாறு காணாத அளவில் மழைநீர் தேங்கியது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நாள்தோறும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தினார். மேலும், சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் வகையில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் வெள்ள மேலாண்மைக்குழு அமைத்து அக்குழுவின் பரிந்துரைகளின்படி மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
வெள்ள மேலாண்மைக் குழுவின் பரிந்துரையின்படி, பணிகள் மேற்கொள்ளப்பட்ட இடங்களில் மழைநீர்த்தேக்கம் இல்லை. தற்சமயம் மழைநீர்த் தேக்கம் ஏற்பட்டுள்ள ஒரு சில இடங்களிலும் நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் வகையில் இக்குழுவானது ஆய்வு செய்து, தனது பரிந்துரைகளை வழங்கவுள்ளது. இப்பரிந்துரைகளின் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பங்கேற்பு
இந்த ஆய்வின்போது பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர்லோஷ் குமார் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.
மருத்துவ முகாம்கள்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை - பெருநகர சென்னை மாநகராட்சி இணைந்து சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் நாளை (சனிக்கிழமை) மழைக்கால மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ள இந்த முகாமை, சென்னை விருகம்பாக்கம் கலைஞர் நகரில் உள்ள ராணி அண்ணாநகர் பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைக்கிறார். மழைக்கால மெகா சிறப்பு மருத்துவ முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.