கள்ளச்சாராயம் குடித்து பலியான 13 குடும்பங்களுக்கு ரூ.1 கோடியே 30 லட்சம் நிதி - அமைச்சர்கள் வழங்கினர்
|கள்ளச்சாராயம் குடித்து பலியான 13 குடும்பங்களுக்கு ரூ.1 கோடியே 30 லட்சம் நிதியுதவியை அமைச்சர்கள் வழங்கினர்.
மரக்காணம்,
விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து இன்று அதிகாலை வரையில் 13 பேர் பலியாகினர். 39-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியான குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்திற்கு இன்று காலை 9.30 மணியளவில் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் வந்தனர். விழுப்புரம் கலெக்டர் பழனி தலைமையில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேராக சென்றனர். அங்கு அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு, ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.
அப்போது எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், மரக்காணம் யூனியன் சேர்மன் தயாளன், துணைத் தலைவர் பழனி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பலியான 13 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் என ரூ.ஒரு கோடியே 30 லட்சம் வழங்கப்பட்டது.