கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தில் அமைச்சர்கள் பங்கேற்பு
|அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் தேநீர் விருந்தில் பங்கேற்றுள்ளன.
சென்னை,
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இதில் தமிழக முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஐகோர்ட்டு நீதிபதிகள், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் எனப் பலரும் பங்கேற்பார்கள்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான குடியரசு தின விழா தேநீர் விருந்து, கவர்னர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்த விருந்தில் கலந்துகொள்ள அரசியல் கட்சியினர் பலருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன.
இந்நிலையில், குடியரசு தினத்தையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, ரகுபதி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
அத்துடன், அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் தேநீர் விருந்தில் பங்கேற்றுள்ளன. காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.