< Back
மாநில செய்திகள்
உதயநிதிக்கு அமைச்சர் பதவி; தி.மு.க. குடும்ப ஆட்சி என்பது உறுதியாகிறது - அண்ணாமலை
மாநில செய்திகள்

உதயநிதிக்கு அமைச்சர் பதவி; தி.மு.க. குடும்ப ஆட்சி என்பது உறுதியாகிறது - அண்ணாமலை

தினத்தந்தி
|
11 Dec 2022 2:28 AM IST

உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க உள்ளதால் தி.மு.க. ஒரு குடும்ப ஆட்சி என்பது உறுதியாகிறது என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

செயற்குழு கூட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலகம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பா.ஜனதா இளைஞரணி மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு இளைஞரணி மாநில தலைவர் ரமேஷ் சிவா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா பேசும்போது, இளைஞரணி கடுமையாக உழைக்க வேண்டும். உங்களது கவனம் கட்சி வளர்ச்சியில் மட்டுமே இருக்க வேண்டும் என்றார். சிறப்பு விருந்தினராக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

குடும்ப ஆட்சி

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆன்லைன் விளையாட்டை கண்டிப்பாக தடை செய்ய வேண்டும் என்பதே எங்களது கருத்து. கவர்னர் எதற்காக ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்தினரை சந்தித்தார் என்பது எங்களுக்கு தெரியாது. உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்க உள்ளனர் என தகவல் வெளிவருகிறது. சமீபத்தில் கனிமொழிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது, இதனால் நாங்கள் காலம் காலமாக கூறுவது போல் தி.மு.க. ஒரு குடும்ப ஆட்சி என்பது தெரிய வருகிறது.

விரைவில் தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டுகளை ஐ.டி. பிரிவு நிர்மல் குமார் தலைமையில் ஆதாரத்தோடு நாங்கள் வெளிக்கொண்டு வர உள்ளோம்.

புயல் நேரங்களில் கண்டிப்பாக விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் தமிழகத்தில் தொடர்ந்து அதிக புயல்கள் ஏற்படுகிறது. பேரிடர் மேலாண்மைக்கு தமிழக அரசு தனி அங்கீகாரம் கொடுத்து பேரிடர் பாதிப்புகளை கண்காணிக்க தனியாக ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும். சூர்யா சிவாவிற்கு அரசியலை விசாலமாக பார்க்கும் பார்வை இல்லை. அதனால் அவர் கட்சியை விட்டு விலகினார்.

பதவிகளை ஆக்கிரமித்த குடும்பத்தினர்

லாலு பிரசாத் ஊழல்வாதி. ஆனாலும் அவர் திறமை வாய்ந்த அரசியல் தலைவர். அவரது மனைவி முதல் மந்திரி, மகன் துணை முதல்-மந்திரி என குடும்பத்தினரே பதவிகளை ஆக்கிரமித்தனர். ஒருவருடைய அரசியல் வாழ்க்கை மக்கள் நலம் சார்ந்து இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அரசியல் வாழ்க்கை பூஜ்ஜியம் ஆகிவிடும். இதற்கு லாலு பிரசாத் உதாரணமாகிவிட்டார். தமிழகத்திற்கும் இது பொருந்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்