< Back
மாநில செய்திகள்
ஆதிதிராவிடர் பள்ளிகள், கல்லூரி விடுதியில் அமைச்சர் ஆய்வு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

ஆதிதிராவிடர் பள்ளிகள், கல்லூரி விடுதியில் அமைச்சர் ஆய்வு

தினத்தந்தி
|
28 July 2022 12:52 AM IST

ஆதிதிராவிடர் பள்ளிகள், கல்லூரி விடுதியில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

பெரம்பலூரில் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவிகள் விடுதியை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்பு மிகவும் பிற்படுத்தப்பட்ட கல்லூரி மாணவியர் விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவினை சாப்பிட்டு அதன் தரம் குறித்தும், அரசால் வழங்கப்பட்டுள்ள பொருட்கள் பதிவேடுகளில் முறையாக பதிவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறதா? என்பது குறித்தும், உணவு தயாரிப்பு பொருட்களின் தரம், மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ள போர்வைகள் உள்ளிட்ட பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து, உணவு பொருள் சேமிப்பு அறை, சமையல் கூடம் மற்றும் உணவருந்தும் கூடம் பராமரிப்பு, விடுதியில் குடிநீர், தங்கும் வசதி, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து அமைச்சர் கயல்விழி கூறுகையில், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை அறிமுகப்படுத்துதல், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஆக்கிரமிப்பு செய்வதை அகற்றுதல், பழுதடைந்த, பழமையான கட்டிடங்களை புதுப்பித்தல், ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு வளர்ச்சி பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. விடுதியின் தங்கியுள்ள மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. மேலும் விடுதி மாணவ- மாணவிகள் உணவுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தல், அவர்களுக்கு கணினி, திறன்பேசி வழங்குதல் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

முன்னதாக களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியை பார்வையிட்டும், பாடாலூர் ஆதிதிராவிடர் நல உயர்நிலை பள்ளியில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு செய்து, மாணவ- மாணவிகளிடம் கலந்துரையாடினார். இந்த ஆய்வின்போது, ஆதிதிராவிடர் நல ஆணையர் மதுமதி, மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பால்பாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்