பாரா ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற தடகள வீரர் மாரியப்பனை நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி பாராட்டு
|பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று மாரியப்பன் இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமைத் தேடித்தந்துள்ளார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் தொடர் சமீபத்தில் பாரீசில் நடைபெற்றது. இந்த தொடரில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்த நிலையில் பாரா ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று தாயகம் திரும்பியுள்ள தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலுவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "மாற்றுத்திறன் தடகள வீரர் தம்பி மாரியப்பன் தங்கவேலு, பாரீஸ் ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் பிரிவில் வெண்கலம் வென்று இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமைத் தேடித்தந்துள்ளார்.
தாயகம் திரும்பியுள்ள அவரை இன்று நேரில் சந்தித்துப் பாராட்டினோம். நினைவுப்பரிசினை வழங்கி அவரின் சாதனையைப் போற்றினோம். தம்பி மாரியப்பன் தங்கவேலு தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்திட நம்முடைய விளையாட்டு மேம்பாட்டுத்துறை அவருக்கு என்றும் துணை நிற்கும். அவருக்கு என் அன்பும், வாழ்த்தும்!" என்று தெரிவித்துள்ளார்.