அரியலூர்
அரசு மருத்துவமனையின் மருத்துவ சேவையை தொடங்கி வைக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மறுநாள் வருகை
|அரசு மருத்துவமனையின் மருத்துவ சேவையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார்.
அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ சேவையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும் அன்றைய தினம் மாலையில் அவர் பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் நிலையத்தை திறந்து வைக்கிறார். மேலும் அவர் குன்னத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நூலகத்தை திறந்து வைக்கிறார். அதன் பிறகு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் மாவட்டம் செல்கிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அமைச்சர் சிவசங்கர், கலெக்டர் ரமணசரஸ்வதி முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிலையில் அரியலூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் சிவ மாணிக்கம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான சிவசங்கர் கலந்து கொண்டு பேசினார். இதில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ சேவையை தொடங்கி வைக்க வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, கட்சியின் ஆக்கப் பணிகள் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. மற்றும் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.