< Back
மாநில செய்திகள்
மகளிர் மேம்பாட்டு நிறுவன போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசு
சென்னை
மாநில செய்திகள்

மகளிர் மேம்பாட்டு நிறுவன போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசு

தினத்தந்தி
|
9 March 2023 12:20 PM IST

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசு வழங்கினார்.

பல்வேறு தடைகளை கடந்து, சாதனைகள் படைத்து வரும் பெண்களை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தவகையில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி, அரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த சுயஉதவி குழுக்களின் தயாரிப்பு பொருட்களின் அரங்கினை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு, அங்கு இருந்த சுயஉதவி குழு பெண்களுடன் கலந்துரையாடினார். அப்போது, சுய உதவி குழுவினை சேர்ந்த பெண்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

மாநில திட்டக்குழுவின் துணைத்தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், கவிஞர் மனுஷ்ய புத்திரன், எழுத்தாளர் கிரேஸ் பானு ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மாநில அளவில் நடைபெற்ற பேச்சு போட்டி, கவிதை போட்டி, குழு நடனம், குழு பாடல் போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், தயாநிதி மாறன் எம்.பி., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு முதன்மைச்செயலாளர் பெ.அமுதா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ச.திவ்யதர்சினி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குனர் பா.பிரியங்கா பங்கஜம், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் முதன்மை இயக்கு அலுவலர் ஜெ.இ.பத்மஜா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கூடுதல் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்