செக் குடியரசு நாட்டுக்கு அரசு முறை பயணம்: தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வாருங்கள்... அமைச்சர் தா.மோ.அன்பரசன் அழைப்பு
|சென்னை:
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், வெளிநாட்டு முதலீடுகளையும் ஈர்க்கும் வகையில் புதிய திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதன் ஒரு கட்டமாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், குறு , சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன், அரசு முறை பயணமாக செக் குடியரசு நாட்டில் நடைபெறும் தொழில் நிறுவன கண்காட்சியில் பங்கு கொள்ள சென்றுள்ளார்.
அவரை, செக் குடியரசு நாட்டின் தொழில் மற்றும் வணிக துறை அரசு அதிகாரிகள் வரவேற்று தொழில் முதலீடுகள் குறித்தும், சுற்றுப் பயண விவரங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
அதனைத்தொடர்ந்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் அங்குள்ள 'எவெக்டார்' விமானம் தயாரிக்கும் தொழிற்சாலை, கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலையை பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது அந்த நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அமைச்சர் தா.மோ.அன்பரசன் அழைப்பு விடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி.அருண் ராய், நிதித்துறை அரசு துணை செயலாளர் சி.பிஆதித்யா செந்தில்குமார், தொழில் வணிக கூடுதல் கமிஷனர் கிரேஸ் பச்சாவ் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.