< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்

"கவர்னர் கருத்துக்கு பதில் சொல்ல எடப்பாடி பழனிசாமி பயப்படுகிறார்"; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

தினத்தந்தி
|
26 Oct 2023 3:00 AM IST

கவர்னர் கருத்துக்கு பதில் சொல்ல எடப்பாடி பழனிசாமி பயப்படுவதாக தேனி அருகே வீரபாண்டியில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

கவர்னர் கருத்துக்கு பதில் சொல்ல எடப்பாடி பழனிசாமி பயப்படுவதாக தேனி அருகே வீரபாண்டியில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

பொற்கிழி வழங்கும் விழா

தேனி மாவட்டம் கம்பத்தில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, 1,066 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் பொற்கிழி வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில், "என்னுடைய அரசியல் வாழ்க்கை பொது வாழ்க்கைக்கு அடித்தளமிட்டது தேனி மாவட்டம். இங்கு நான் பொற்கிழி வழங்க மட்டும் வரவில்லை. சேலத்தில் நடக்கும் மாநாடு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கழகத்துக்காக உழைத்த மூத்த முன்னோடிகளான உங்களின் வாழ்த்துகளை பெறுவதற்காக தான் வந்துள்ளேன். கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை கழகத்தின் 40 மாவட்டங்களில் என்னுடைய கையால் ரூ.40 கோடியை கழகத்துக்காக பாடுபட்ட மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழியாக வழங்கி உள்ளேன்" என்றார்.

அதன்பிறகு கம்பம் பாவலர் படிப்பகம் அருகே மாணவர்களுக்கான கலைஞர் நூலகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், வீரபாண்டியில் இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தின்போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் வெள்ளி செங்கோல் வழங்கினர். பின்னர் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

சேலம் மாநாடு

தேனி மாவட்டத்தை உருவாக்கியதே கருணாநிதி தான். சோத்துப்பாறை அணையை கட்டியது கருணாநிதி தான். முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாட்டின் உரிமையை சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று நிலை நாட்டியவரும் கருணாநிதி தான். உழைத்தால் யாரும் முன்னேறலாம் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தி.மு.க. இளைஞரணி. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு நம்முடைய தலைவர் மு.க.ஸ்டாலின். படிப்படியாக உழைத்து முதல்-அமைச்சர் நாற்காலியில் அமர்ந்து இருப்பவர் தான் நம்முடைய தலைவர். யாருடைய காலையும் பிடித்து டேபிள் சேருக்குள்ள போய் முதல்-அமைச்சர் ஆனவரல்ல நம்முடைய தலைவர்.

சேலத்தில் டிசம்பர் 17-ந் தேதி நடக்க உள்ள இளைஞரணி மாநாட்டை வெற்றி மாநாடாக நடத்த வேண்டும். 2 மாதங்களுக்கு முன்பு மதுரையில் ஒரு மாநாடு நடந்தது. ஒரு மாநாடு எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு அடையாளமாக மதுரையில் அந்த மாநாடு நடந்தது. ஆனால் நம்முடைய மாநாட்டில் நமது இயக்கத்தின் வரலாறு பேசப்படும். நமது 2 ஆண்டு கால சாதனைகள் பேசப்படும்.

'நீட்' தேர்வு

'நீட்' தேர்வை ரத்து செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம். இந்த 'நீட்' தேர்வு தமிழ்நாட்டுக்குள் எப்படி வந்தது. நுழைவுத்தேர்வை முதன்முதலில் தமிழ்நாட்டில் ஒழித்தவர் கருணாநிதி. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை தமிழகத்துக்குள் 'நீட்' தேர்வு வரவில்லை. அதற்கு அவரை பாராட்டலாம். ஆனால், அவர் மறைந்த பிறகு பா.ஜ.க.வின் அடிமையாக இருந்த அ.தி.மு.க. தான் 'நீட்' தேர்வை முதல் முறையாக தமிழகத்துக்குள் நுழையவிட்டது. அரியலூர் அனிதாவில் ஆரம்பித்து சென்னை குரோம்பேட்டையில் ஜெகதீஷ் என்ற மாணவர் வரை 12 மாணவர்கள் 'நீட்' தேர்வால் உயிரிழந்துள்ளனர்.

ஆட்சிக்கு வந்தால் 'நீட்' தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தோம். அதற்காக முழு மூச்சோடு உண்மையாக போராடிக் கொண்டு இருப்பது தான் நம்முடைய தி.மு.க. அரசு. 2 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி உள்ளோம். இப்போது அது ஜனாதிபதி முன்பு இருக்கிறது.

'நீட்' விலக்கு நம்முடைய இலக்கு என்று மாபெரும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி இருக்கிறோம். 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றால் இந்த ஒரு உதயநிதி களத்துக்கு வந்தால் பத்தாது. நீங்கள் அத்தனை பேரும் உதயநிதியாக மாறி களத்திற்கு வர வேண்டும்.

அ.தி.மு.க.வுக்கு அழைப்பு

சேலம் மாநாட்டில் 50 லட்சம் கையெழுத்தையும் முதல்-அமைச்சரிடம் ஒப்படைக்க உள்ளோம். கண்டிப்பாக நமது போராட்டம் வெற்றி பெறும். இது, தனிப்பட்ட உதயநிதிக்காகவோ, அல்லது தி.மு.க.வுக்கான போராட்டமோ கிடையாது. இது, தமிழக மாணவர்களின் கல்வி உரிமையை மீட்க வேண்டிய போராட்டம்.

அ.தி.மு.க.வுக்கு நான் மீண்டும் அழைப்பு விடுக்கிறேன். தயவுசெய்து இதை அரசியல் ஆக்காதீர்கள். 'நீட்' தேர்வு விலக்கு வந்து விட்டால் அந்த ஒட்டுமொத்த பெருமையையும் நான் உங்களுக்கே கொடுத்து விடுகிறேன். அ.தி.மு.க. தான் காரணம் என்று ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இப்பவும் இந்த 'நீட்' தேர்வு ஒழிப்பு என்பது நாடகம் என்கிறார்கள். இன்னொரு உயிர் போய்விடக் கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காக இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

பிரதமர் மோடி இந்தியாவின் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் தி.மு.க.வை பற்றியும், தமிழக முதல்-அமைச்சர் பற்றியும், என்னைப் பற்றியும் தான் பேசுகிறார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கருணாநிதி குடும்பம் மட்டும் தான் வாழ்கிறது என்று சொல்கிறார். ஆம், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கருணாநிதி குடும்பம் தான் வாழ்கிறது. ஒட்டுமொத்த தமிழ்நாடும் கருணாநிதியின் குடும்பம் தான்.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. எந்த குடும்பம் வாழ்கிறது. மோடியின் நெருங்கிய நண்பர் அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடத்துக்கு வந்தது எப்படி?

பா.ஜ.க. ஊழல்

மோடியை ஒரேயொரு விஷயத்துக்காக பாராட்டியே ஆக வேண்டும். இந்தியாவை மாற்றிக்காட்டுவேன் என்றார். இன்றைக்கு இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றுகிறார். இது மட்டும் தான் மோடி செய்த ஒரே உருப்படியான வேலை. 2014-ல் ஆட்சிக்கு வந்த போது, 2020-ல் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவேன் என்றார். இப்போது திரும்பி அதையே தான் சொல்கிறார். 2047-ல் வல்லரசு நாடாக மாற்றிக் காட்டுவேன் என்கிறார்.

சி.ஏ.ஜி. என்ற மத்திய அரசின் தணிக்கைக்குழு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 9 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியின் ஊழலை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி விட்டனர். ரூ.7.5 லட்சம் கோடிக்கு கணக்கு இல்லை. துவாரகா சாலை என்று ஒரு திட்டம். அதில் 1 கி.மீ. ரோடு போடுவதற்கு ரூ.250 கோடி செலவு என்று கணக்கு காட்டி இருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமிக்கு பயம்

ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என்று அண்ணா கூறினார். தமிழக கவர்னர் ஒரு நிகழ்ச்சியில் சென்று, தமிழ்நாட்டில் ஆரியமும் கிடையாது, திராவிடமும் கிடையாது என்று பேசி இருக்கிறார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் இதுகுறித்து கேட்கிறார்கள். அதற்கு அவர், இதுகுறித்து பதில் சொல்ல முடியாது. அதற்கு நிறைய படித்து இருக்கணும். இதில் எல்லாம் தலையிட மாட்டேன் என்கிறார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அவர் தான் தலைவர். கட்சிப் பெயரில் அண்ணா இருக்கிறது, திராவிடம் இருக்கிறது. ஆனால், இதில் எல்லாம் தலையிட மாட்டேன் என்கிறார். அவ்வளவு பயம் அவருக்கு.

அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி முறிந்து விட்டது என்று புதிதாக நாடகம் ஆடுகிறார்கள். யாராவது நம்புவார்களா? அவர்கள் அறிவிப்பதற்கு முதல் நாளில் 4 முன்னாள் அமைச்சர்கள் திருட்டுத்தனமாக டெல்லிக்கு சென்றார்கள். தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும். அ.தி.மு.க. வேறு, பா.ஜ.க. வேறு கிடையாது. தி.மு.க.வை பொறுத்தவரை நீங்கள் ஒன்றாக வந்தாலும் வெற்றி பெறப்போவது நாங்கள் தான். தனியாக வந்தாலும் ஓட விடப்போவது தி.மு.க. தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, தேனி தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன், எம்.எல்.ஏ.க்கள் எம்.எல்.ஏ. மகாராஜன் (ஆண்டிப்பட்டி), சரவணக்குமார் (பெரியகுளம்), முன்னாள் எம்.எல்.ஏ.வும், போடி மேற்கு ஒன்றிய செயலாளருமான போடி லட்சுமணன், தேனி வடக்கு ஒன்றிய செயலாளரும் தேனி ஒன்றியக்குழு தலைவருமான சக்கரவர்த்தி, தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செல்வம், துணை அமைப்பாளர்கள் சுகுமாறன், பிரபாகரன், அபுதாஹிர், ராமகிருஷ்ணன், முருகன், ஸ்டீபன் ராஜா, வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆஜிப்கான், துணை அமைப்பாளர்கள் பரணீஸ்வரன், ஜெயக்குமார், செல்லத்துரை, தெய்வேந்திரன், முத்துராம்ஜி, தேனி ஒன்றிய முன்னாள் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் முருகஜெகதீசன், தேனி வடக்கு மாவட்ட அயலக அணி அமைப்பாளர் வி.ஆர்.ராஜன், போடி நகர முன்னாள் செயலாளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான ராஜரமேஷ், இந்து அறநிலையத்துறை மாவட்ட தலைவரும், வடக்கு மாவட்ட துணைச்செயலாளருமான ராசி.செந்தில், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜக்கப்பன், கம்பம் நகர செயலாளர் வீரபாண்டியன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் என்.ஆர்.வசந்தன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்