சென்னை
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் வளர்ச்சி பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
|சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு நேரடி களஆய்வு மேற்கொண்டார்.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான சேகர்பாபு, சென்னை கொளத்தூர், புழல், எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளுக்கு நேரில் சென்று களஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
சென்னை பெருநகர பகுதியிலுள்ள 26 சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளை துரிதமாக செயல்படுத்தும் வகையில், கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலைப் பகுதியில் உள்ள சந்தை, ரூ.10 கோடியில் நவீன சந்தையாக கட்டித்தரப்படும். மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புழல், மேட்டுப்பாளையம், சீனிவாசன் தெருவில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தை சிறந்த முறையில் ரூ.1.50 கோடியில் புனரமைத்து தரப்படும்.
அதேபோல, புழல், மகாலட்சுமி நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி பேரறிஞர் அண்ணா முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் 26.04.1967 அன்று தொடங்கப்பட்டதாகும். தற்போது வரையில் சிமெண்டு சீட்டில் தான் இயங்கி வருகிறது. அது கான்கிரீட் தளத்துடன் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய நடுநிலைப்பள்ளியாக மாற்றப்படும்.
திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எண்ணூரில் அமைந்துள்ள மீன் அங்காடி மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு நிரந்தர கடைகள் அனைத்து வசதிகளுடன் கூடிய கடைகள் ரூ.5 கோடியில் புதுப்பிக்கப்பட்டு சிறந்த முறையில் கட்டித் தரப்படும். அதில் மீன் மற்றும் இறைச்சி கடை தனியாகவும், காய்கறி மற்றும் கடைகள் தனியாகவும் மற்றும் ஒரு திருமண மண்டபம் கட்டித் தரப்படும். அதேபோல, வடசென்னை மக்களுக்குப் பயன்படும் வகையில் பார்வதி நகரில் இருந்து காசிமேடு வரை சுமார் 5 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரை ரூ.30 கோடி செலவில் அழகுபடுத்தப்படும்.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்புகளில், சென்னைப் பெருநகர பகுதியிலுள்ள 26 சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளில் 16 இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள 18 இடங்களிலும் வெகு விரைவில் கள ஆய்வு மேற்கொண்டு பணிகளைத் தொடங்க இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, வடசென்னை தொகுதி எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் சுதர்சனம், கே.பி.சங்கர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.