மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
|கடந்த சில நாட்களாக சென்னையில் விட்டு விட்டு கனமழை பெய்துவருகிறது.
சென்னை,
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும். இந்த புயலுக்கு 'மிக்ஜம்' என பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னையில் விட்டு விட்டு கனமழை பெய்துவருகிறது.
இந்த நிலையில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பாலாஜி நகர், நேர்மை நகரில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமினை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பார்வையிட்டார்.
இதில் பாலாஜி நகர் பிரதான சாலை, குமரன் நகர், திருப்பதி நகர், வளர்மதி நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வெளியேற்றப்படும் பணிகளையும், சாலைகளை தூய்மைப்படுத்தும் பணிகளையும் அவர் பார்வையிட்டார். பின்னர் அக்பர் ஸ்கொயர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் சேகர்பாபு நிவாரண உதவிகள் வழங்கினார்.
இந்த ஆய்வின்போது, நகர் ஊரமைப்பு இயக்குனர் பா.கணேசன், மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையர் கே.ஜே.பிரவீன்குமார், மண்டலக்குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், முரளீதரன், ஏ.நாகராஜன் உள்பட பலர் இருந்தனர்.