< Back
மாநில செய்திகள்
ரூ.3¾ கோடியில் புதிய திட்டப்பணிகள் அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
சென்னை
மாநில செய்திகள்

ரூ.3¾ கோடியில் புதிய திட்டப்பணிகள் அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

தினத்தந்தி
|
30 July 2023 11:05 AM IST

ராயபுரம் மண்டலத்தில் ரூ.3 கோடியே 82 லட்சம் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

சென்னை,

சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.3 கோடியே 82 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தயாநிதிமாறன் எம்.பி. ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

அதன்படி, ராயபுரம் மண்டலம் 59-வது வார்டுக்கு உட்பட்ட சத்தியவாணி முத்து நகரில் 2023-24-ம் ஆண்டிற்கான வெள்ள நிவாரண நிதியின் கீழ் ரூ.2 கோடியே 77 லட்சம் மதிப்பிலான புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து கவுன்சிலர் மேம்பாட்டு நிதியின் கீழ் வார்டு 60-ல் நாயக்கன் தெருவில் உள்ள சென்னை உருது பள்ளியில் ரூ.24 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணியினையும், மூர் தெரு மற்றும் போஸ்ட் ஆபிஸ் தெருவில் ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சாலை அமைக்கும் பணியையும் தொடங்கி வைத்தனர்.

பின்னர், வெங்கட மேஸ்திரி தெருவில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை ஆய்வு செய்தனர். இதேபோல, 54-வது வார்டில் உள்ள அம்மன் கோவில் தெருவில் சென்னை நடுநிலைப் பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பில் மேப்பாட்டு பணியையும், ரூ.6 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் மேம்பாட்டு பணியையும் தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து யானைகவுனி பகுதியில் மூலதன நிதியின் கீழ், ரூ.27 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரெயில்வே மேம்பால பணிகளை ஆய்வு செய்தனர். பின்னர், கல்யாணபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, வடக்கு வட்டார துணை கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மண்டலக்குழு தலைவர் ஸ்ரீராமுலு மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்